விருதுநகர் மாவட்டம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் எம். புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையம் பட்டாசு ஆலை என்று இருவேறு இடங்களில் அடுத்துடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர்கள் உயிரிழந்துள்ளனர், பலர் காயமுற்றுள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்குள், கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசுக்கடை தீ விபத்தில் 15 பேர்கள், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பபட்ட தீ விபத்தில் 4 பேர் மற்றும் அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே வெற்றியூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் என்று 29 பேர் இறந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் எம். புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. பலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் வரும் செய்து மனதை பதறவைக்கிறது.
தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தொழிலாளிகள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்திருந்தாலும் கூட, தங்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக வேலைக்கு சென்று உயிரை இழப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது. மிகுந்த துயரத்திற்குரியது.
பட்டாசு ஆலைகள் அரசின் கோட்பாடுகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பட்டாசு ஆலையில் பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே வேலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பதிவு பெற்ற, பதிவு செய்யப்படாத ஆலைகளை அரசு உடனடியாக ஆய்வு செய்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். அவற்றை கண்காணிக்க என்று ஒவ்வொறு மாவட்டத்திற்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். காயமுற்று மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடுதிரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்