மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம் பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகளை நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொதுத்தன்மை கொண்ட திட்டங்களைக் கண்டறிந்து, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், சிறந்த செயல்திறன் மற்றும் பலனுக்காக திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
புதுதில்லியில் தேசிய சிறந்த நிர்வாக மையம் ஏற்பாடு செய்திருந்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகளுக்கான 6-வது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கூட தொழில்நுட்பம் கிடைப்பதாலும், வளங்களைப் பரவலாக்குவதாலும் மத்திய மற்றும் மாநில குடிமைப் பணிச் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்வாக சீர்திருத்தங்களில் சிறப்பு ஆர்வம் கொண்டவர் என்றும், மே 2014 இல் பொறுப்பேற்றவுடன், நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், அதிக பொறுப்புடைமை கொண்டதாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது நாட்டில் பொதுக் கொள்கை தற்போது நிதிக் கூட்டாட்சி, கிராமப்புறத்தை மாற்றியமைத்தல் மற்றும் பொது சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்