பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 19, 2023) கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், மகாத்மா காந்தியால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் சத்தியாகிரகத்தின் நினைவாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நீங்கள் என்ற என்று கூறினார். இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால், உலகம் முழுவதும் மதிக்கப்படும் விலைமதிப்பற்ற பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காந்தியடிகளின் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளவும், உள்வாங்கவும் எளிமை மற்றும் உண்மையின் நல்ல விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். எளிமை மற்றும் உண்மையின் பாதை, உண்மையான மகிழ்ச்சி, அமைதி மற்றும் புகழுக்கான பாதை என்று அவர் குறிப்பிட்டார். அவருடைய போதனைகளின்படி மனம், பேச்சு மற்றும் செயல்களால் எப்போதும் சத்தியத்தின் பாதையைப் பின்பற்ற மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அஹிம்சை, இரக்கம், ஒழுக்கம் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய கொள்கைகளின் மீது காந்தியடிகள் மக்களின் நம்பிக்கையை அதிகரித்தார் என்று குடியரசுத்தலைவர் கூறினார். நமது சமூகம், அரசியல், ஆன்மீகம் ஆகியவற்றை இந்தியத்தன்மையுடன் மிக ஆழமாக இணைத்தவர் அவர் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். உலக சமூகத்தில் பலர் காந்தியை இந்தியாவின் உருவமாக காண்பதாக அவர் கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பாரன் சத்தியாகிரகம் சமூகத்தின் கட்டமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். அந்த இயக்கத்தின் போது, சாதி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் இணைந்து சமைத்து உண்டதாக அவர் தெரிவித்தார். சுமார் 106 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது உத்தரவின் பேரில், சம்பாரன் மக்கள் சமூக, சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் பாதையைத் தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் ஆட்சியைப் பணியவைத்தார் என்று அவர் கூறினார். இன்றும், சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் அதே பாதை நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் பாதையில் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா