பாலின சமத்துவமின்மையை சரி செய்வதில் உறுதியான நடவடிக்கை தேவை என மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார் .

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அக்டோபர் 18, அன்று மத்திய கண்காணிப்பு வாரியத்தின் 29-வது கூட்டத்தைக் கூட்டினார். அப்போது, சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலின சமத்துவமின்மையை சரி செய்வதற்கு உறுதியான நடவடிக்கை தேவை என்பதற்கான  தருணம் இது என்று அவர்  குறிப்பிட்டார்.

குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் மற்றும் குழந்தை பிறப்பில் பாலின விகிதம் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பாலின சமத்துவத்தை நோக்கிய தேசத்தின் பயணம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார். 2020-ஆம் ஆண்டின் மாதிரிப் பதிவு கணக்கெடுப்பு அறிக்கையை மேற்கோள் காட்டி, பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிகத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அமைச்சர் தெரிவித்தார்.

“2017-19 ஆம் ஆண்டில் 904 -ஆக இருந்த இந்தத் தரவு பாராட்டத்தக்க வகையில், 2018-20 ஆம் ஆண்டில் 907 -ஆக மூன்று புள்ளிகள் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. முக்கியமாக, கணக்கெடுக்கப்பட்ட 22 மாநிலங்களில் 12 மாநிலங்களில் இந்த முன்னேற்றம் தெரியவந்துள்ளது.

கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் மகப்பேறுக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் (ஒழுங்குமுறை மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்) சட்டம், 1994-ஐ செயல்படுத்துவதில் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை  இது சுட்டிக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

மேலும், சமீபத்திய மாதிரிப் பதிவு ஆய்வுகள் அறிக்கையின் படி, 2015-ஆம் ஆண்டில் ஐந்து புள்ளி இடைவெளியுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் பாலின இடைவெளி இரண்டு புள்ளிகள் குறைவைக் கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். “பத்து மாநிலங்கள் பாலின இடைவெளியைத் திறம்பட மாற்றியமைத்துள்ளன, இது பெண் குழந்தைகளின் பாலின விகிதங்களில் சாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று அவர் கூறினார்.

ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர் மாண்டவியா பாராட்டினார்.

திவாஹர்

Leave a Reply