உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்தியாவின் முதலாவது பிராந்திய அதிவிரைவு போக்குவரத்து முறையை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதிவிரைவு போக்குவரத்து முறை (ஆர்ஆர்டிஎஸ்) வழித்தடத்தின் முன்னுரிமைப் பிரிவை இன்று (18-10-2023) திறந்து வைத்தார். சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் நமோ பாரத் ரேபிட்எக்ஸ் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது இந்தியாவில் பிராந்திய அதிவிரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆர்.ஆர்.டி.எஸ்) தொடக்கம் ஆகும். பெங்களூரு மெட்ரோவின் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் இரண்டு பிரிவுகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிராந்திய விரைவு ரயிலான நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் செய்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயில் சேவையான நமோ பாரத் ரயில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதால், இது நாட்டிற்கு ஒரு வரலாற்றுத் தருணம் என்று கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தில்லி-காசியாபாத்-மீரட் ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர் இன்று சாஹிபாபாத் முதல் துஹாய் பணிமனை வரை அதன் செயல்பாட்டைக் குறிப்பிட்டார். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கான  அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.ஆர்.டி.எஸ் இன் மீரட் பகுதியைத் தொடங்கி வைப்பதற்கு அவர் கலந்து கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார். நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திரு நரேந்திர மோடி, நாட்டில் ரயில்வேத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நவராத்திரி விழாவைக் குறிப்பிட்ட பிரதமர், நமோ பாரத் ரயில் மாதா காத்யாயினியால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்றார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள நமோ பாரத் ரயிலின் உதவி ஊழியர்கள் மற்றும் லோகோமோட்டிவ் பைலட்டுகள் அனைவரும் பெண்களே என்றும் அவர் தெரிவித்தார். நமோ பாரத் ரயில்  நாட்டில் பெண்கள் சக்தியை வலுப்படுத்துவதன் அடையாளமாகும் என்று அவர்  கூறினார். நவராத்திரி காலத்தில் தொடங்கப்படும் இந்த நமோ பாரத் ரயில் திட்டங்களுக்காக தில்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேச மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். நமோ பாரத் ரயில் நவீனத்துவத்தையும் வேகத்தையும் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். நமோ பாரத் ரயில் புதிய இந்தியாவின் புதிய பயணத்தையும், அதன் புதிய தீர்மானங்களையும் வரையறுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது என்ற தமது கருத்தை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார். மெட்ரோவின் இரண்டு பிரிவுகள் தகவல் தொழில்நுட்ப மையமாகத் திகழும் பெங்களூருவில் போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். தினமும் சுமார் 8 லட்சம் பயணிகள் பெங்களூரு மெட்ரோவில் பயணிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

21-ஆம் நூற்றாண்டில், இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் வரலாற்றை எழுதி வருகிறது என்று பிரதமர் கூறினார். சந்திரயான் 3-ன் வெற்றியைக் குறிப்பிட்ட அவர், ஜி 20 உச்சமாநாட்டின் வெற்றி இந்தியாவை முழு உலகின் ஈர்ப்பு மையமாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இந்தியாவில் 5ஜி அறிமுகம் மற்றும் விரிவாக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சாதனை எண்ணிக்கை ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியைக் குறிப்பிட்ட அவர், மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலைகளை இந்தியாவில் நிறுவ பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.  போர் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்டவை தொடர்பாகவும் அவர் பேசினார்.  நமோ பாரத் ரயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, நடைமேடைகளில் நிறுவப்படும் திரைக் கதவுகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவித்தார். நமோ பாரத் ரயிலில் ஏற்படும் ஒலி அளவு குறைவாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

நமோ பாரத் ரயில் என்பது எதிர்கால இந்தியாவுக்கான ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட அம்சம் என்றும், வளர்ந்து வரும் பொருளாதார வலிமையுடன் தேசத்தின் மாற்றத்திற்கு இது எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் கூறினார். முதல் கட்டமாக தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் பல பகுதிகள் நமோ பாரத் ரயிலுடன் இணைக்கப்படும் நிலையில், இந்த 80 கிலோ மீட்டர் தில்லி – மீரட் வழித்தடம் ஒரு தொடக்கம் மட்டுமே என்று பிரதமர் கூறினார். வரும் நாட்களில், நாட்டின் பிற பகுதிகளிலும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை உருவாக்குவதற்கும் இதேபோன்ற அமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர்  தெரிவித்தார்.

இந்த நூற்றாண்டின் இந்த மூன்றாவது பத்தாம் ஆண்டு இந்திய ரயில்வேத் துறைக்கு மாற்றத்திற்கான பத்தாண்டு என்று பிரதமர் கூறினார். இந்த பத்தாம் ஆண்டின் இறுதிக்குள், உலகிலேயே மிகச் சிறந்த நிலையில் இந்திய ரயில்களை நீங்கள் காண்பீர்கள் என்ற உத்தரவாதத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழங்குவதாகப் பிரதமர் கூறினார். பாதுகாப்பு, தூய்மை, அதிக வசதிகள், ஒருங்கிணைப்பு, மற்றும் திறன் ஆகியவற்றில் இந்திய ரயில்வே உலகில் ஒரு புதிய உச்சத்தை அடையும் என்று அவர் கூறினார். இந்திய ரயில்வே 100 சதவீத மின்மயமாக்கல் இலக்கை அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் கூறினார். நமோ பாரத் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள், அம்ரித் பாரத்  ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார். அம்ரித் பாரத், வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் இந்த பத்தாம் ஆண்டின் இறுதிக்குள் நவீன ரயில்வேயின் அடையாளமாக மாறும் என்று அவர் மேலும் கூறினார்.

தில்லியின் சராய் காலே கான், ஆனந்த் விஹார், காசியாபாத் மற்றும் மீரட் பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் நமோ பாரத் ரயில் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துதல், சிறந்த காற்றுத் தரத்தை வழங்குதல், குப்பைக் கிடங்குகளை அகற்றுதல், சிறந்த கல்வி வசதிகள், பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். நாட்டில் பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்த அரசு முன்னெப்போதையும் விட அதிகமாக செலவிடுகிறது என்று தெரிவித்த பிரதமர், நிலம், வான் மற்றும் கடல் ஆகிய அனைத்து நிலைகளிலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். நீர்வழிப் போக்குவரத்து அமைப்புகளைக் குறிப்பிட்ட  அவர், வாரணாசி முதல் ஹால்டியா வரை கங்கையில் மிகப்பெரிய நீர்வழிப் பாதை உருவாக்கப்படுவதையும் நாட்டின் ஆறுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் உதவியுடன் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இப்பகுதிகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு அனுப்பலாம் என்று அவர் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த கங்காவிலாஸ் நதிக் கப்பல் பயணத்தையும் பிரதமர் குறிப்பிட்டார், இது 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான பயணத்தை முடித்து, உலகின் மிக நீளமான நதி கப்பல் என்ற உலக சாதனையை அது உருவாக்கியது என்று அவர் கூறினார். நாட்டில் துறைமுக உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது மற்றும் நவீனமயமாக்குவது குறித்தும் அவர் பேசினார். இதன் நன்மைகளை கர்நாடகா போன்ற மாநிலங்களும் பெறுகின்றன என அவர் தெரிவித்தார். நவீன விரைவுச் சாலைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்த ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுவதாகவும், நமோ பாரத் அல்லது மெட்ரோ ரயில்கள் போன்ற நவீன ரயில்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி செலவிடப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். தில்லியில் மெட்ரோ நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்படும் அதே வேளையில், உத்தரபிரதேசத்தில் நொய்டா, காசியாபாத், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் கான்பூர் போன்ற நகரங்கள் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன என்று பிரதமர் கூறினார். கர்நாடகாவிலும் பெங்களூரு மற்றும் மைசூருவில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் விமான நிறுவனங்கள் 1000-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க, விமான உற்பத்தி நிறுவனங்களிடம் பணி ஆணை அளித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். விண்வெளித் துறையில் இந்தியாவின் வேகமான முன்னேற்றம் குறித்துப் பேசிய பிரதமர், நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் குறித்தும் எடுத்துரைத்தார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டம் மற்றும் விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட 2040 ஆம் ஆண்டு வரையிலான செயல்திட்டங்களை அரசு தயாரித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். நமது விண்கலத்தின் மூலமாக முதல் இந்தியரை நிலவில் தரையிறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் கூறினார். வளர்ச்சிக்கான இந்த செயல்பாடுகள் நாட்டின் இளைஞர்களுக்காக முன்னெடுக்கப்படுவதாகவும், இவை அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நகர்ப்புற மாசுபாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இதனால் நாட்டில் மின்சாரப் பேருந்துகளின் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். மாநிலங்களுக்கு 10,000 மின்சார பேருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதை அவர் எடுத்துரைத்தார். தில்லியில் ரூ. 600 கோடி செலவில் 1300-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை இயக்க மத்திய அரசு தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார். இவற்றில், 850-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் ஏற்கனவே தில்லியில் ஓடத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல், பெங்களூரிலும், 1,200-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை இயக்க, மத்திய அரசு, ரூ. 500 கோடி நிதியுதவி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். தில்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகா என அனைத்துப் பகுதிகளிலும் எல்லா நகரங்களிலும் நவீன மற்றும் பசுமைப் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.

நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்பில் மக்களின் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். மெட்ரோ அல்லது நமோ பாரத் போன்ற ரயில்கள் பயணிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார். தரமான உள்கட்டமைப்பு நாட்டின் இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு எவ்வாறு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். மருத்துவமனைகள் போன்ற சமூக உள்கட்டமைப்பு வசதிகள், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார். டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் பயனாளிகளுக்கு நேரடியாகப் பலன்கள் சென்றடையவும் இடைத்தரகர்களுக்கு பயன்கள் கசிவதைத் தடுக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

நடப்பு பண்டிகை காலத்தில், விவசாயிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் எடுத்த முடிவுகளையும் பிரதமர் விளக்கினார். ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 425, கடுகு ரூ. 200 மற்றும் கோதுமை குவிண்டாலுக்கு ரூ. 150 அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 1400 ஆக இருந்த கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை இப்போது ரூ. 2000-த்தைத் தாண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 9 ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடுகு-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இந்த காலகட்டத்தில் குவிண்டாலுக்கு ரூ. 2600 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு, உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு ஆதரவு விலையை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

மலிவு விலையில் யூரியா கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசினார். சர்வதேசச் சந்தையில் 3000 ரூபாய் மதிப்புள்ள யூரியா மூட்டைகள் இந்திய விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பதை அவர் குறிப்பிட்டார். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் அரசு செலவிடுகிறது என்று அவர் கூறினார்.

அறுவடைக்குப் பிறகு எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளை, அது நெல் வைக்கோலாகவோ அல்லது வேறு வகையிலே பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு வலியுறுத்தி வருவதைப் பிரதமர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் உயிரி எரிபொருள் மற்றும் எத்தனால் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 10 மடங்கு எத்தனால் உற்பத்தி நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். எத்தனால் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு இதுவரை சுமார் ரூ. 65 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த பத்து மாதங்களில் மட்டும், நாட்டின் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 18 ஆயிரம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். மீரட்-காசியாபாத் பகுதி விவசாயிகளுக்கு மட்டும் 2023 ஆம் ஆண்டில் இந்த  10 மாதங்களில் எத்தனாலுக்காக ரூ. 300 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 500 ரூபாய் குறைத்தல், 80 கோடிக்கும் அதிகமான குடிமக்களுக்கு இலவச உணவு தானியப் பொருட்கள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு, லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ஆகிய அரசின் நடவடிக்கைகளையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் சந்தையில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்பதால் இது முழு பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்போது ஒவ்வொரு குடும்பத்திலும் பண்டிகை மகிழ்ச்சி அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பண்டிகை மனநிலையில் மகிழ்ச்சியுடன் உள்ளது என்று அவர் கூறினார்.  நீங்கள் என் குடும்பத்தினர் என்றும் உங்களது நலன் எனது முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார்.  உங்களுக்காக பல பணிகள் நடைபெறுகிறது என்று கூறிய பிரதமர் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியடைவேன் என்றார். நீங்கள் திறமையுடன் இருந்தால், நாடும் திறமையானதாக இருக்கும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.  

இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும், காணொலி மூலம் கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையாவும் கலந்து கொண்டனர். 

தில்லி – காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தடம்

தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட   முனையத்தின்  17 கிலோ மீட்டர் தொலைவிலான  முன்னுரிமைப் பிரிவு தொடங்கப்படும். இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியே  சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையை இணைக்கும். தில்லி – காசியாபாத் – மீரட் வழித்தடத்திற்கு 2019 மார்ச் 8-ம் தேதி பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

உலகத் தரம் வாய்ந்த புதிய போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பிராந்திய இணைப்பை மாற்றுவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பிராந்திய அதி விரைவு போக்குவரத்து முறை திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது புதிய ரயில் அடிப்படையிலான, மிதமான அதிவேக, அதிக அதிர்வெண் பயணிகள் போக்குவரத்து அமைப்பாகும்.

மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகம் என்ற வடிவமைப்புடன், பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை என்பது ஒரு மாற்று பிராந்திய மேம்பாட்டு முயற்சியாகும். இது நகரத்திற்குள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அதிவேக ரயில்களை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேவைக்கேற்ப ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் சேவை என்ற நிலைய எட்டமுடியும்.

தில்லியில் மொத்தம் எட்டு பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையங்களை உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தில்லி – காசியாபாத் – மீரட் முனையங்கள் உட்பட மூன்று வழித்தடங்கள் முதல் கட்டத்தில் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன; தில்லி – குருகிராம் -எஸ்.என்.பி – அல்வார் முனையம், மற்றும் தில்லி – பானிபட் முனையம். தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையம்  ரூ.30,000 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படுகிறது. மேலும் காசியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக செல்லும் பயண நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் தில்லியையும் மீரட்டையும் இணைக்கும்.

பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையம் நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அதிநவீன பிராந்திய போக்குவரத்து தீர்வாகும். மேலும் இது உலகின் சிறந்தவற்றுடன் ஒப்பிடத்தக்கது. இது நாட்டில் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நவீன நகரங்களுக்கு இடையிலான பயணத் தீர்வுகளை வழங்கும். பிரதமர் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  கட்டமைப்பு ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்து சேவைகள் போன்றவற்றுடன் விரிவான பன்முக ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கும். இத்தகைய மாற்றமான பிராந்திய நகர்வு தீர்வுகள் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும்; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புகளுக்கு மேம்பட்ட அணுகுமுறையை வழங்குதல்;  வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.

பெங்களூரு மெட்ரோ

பிரதமரால் நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்படும் இரண்டு மெட்ரோ பாதைகள் பையப்பனஹள்ளி- கிருஷ்ணராஜபுரா மற்றும் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை இணைக்கின்றன. முறையான தொடக்க நிகழ்ச்சிக்காக காத்திருக்காமல், இந்த முனையத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வசதியாக இந்த இரண்டு மெட்ரோ வழித்தடங்களும் 2023 அக்டோபர் 9 முதல் பொது சேவைக்கு திறக்கப்பட்டன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply