வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: புதிய வாக்காளர்களை அதிகளவில் பா.ம.க.வினர் சேர்க்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் .

தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 9-ஆம் நாள் வரை புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள தகுதியானவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, வாக்குரிமை பெற்றுத் தரும் பணிகளில் பா.ம.க.வினர் தீவிரம் காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக அக்டோபர், நவம்பர், திசம்பர் ஆகிய மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 2024-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி காணும் நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்குகின்றன. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ஆம் தேதி வெள்ளிக் கிழமை வெளியிடப்படவுள்ளது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தகுதியுடைய அனைவரும் வரும் 27-ஆம் நாள் முதல் திசம்பர் 9-ஆம் தேதி வரை அதற்கான விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அதிகாரி/ உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரின் அலுவலகங்களில் தாக்கல் செய்ய முடியும்.

அத்துடன் நவம்பர் 4,5,18, 19 ஆகிய நான்கு நாட்களும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம்களில் வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களைச் செய்தல் ஆகியவற்றை உரிய படிவங்களை நிரப்பி, அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்வதன் மூலம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ம.க.வினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக வாக்குச்சாவடி நிலையில் தொடங்கி, ஒன்றிய அளவிலும், தொகுதி அளவிலும் குழுக்களை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி களப் பணியாளர்கள், பா.ம.க.வின் பல்வேறு நிலை நிர்வாகிகள், இணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரை இந்தக் குழுக்களில் சேர்க்க வேண்டும். இந்தப் பணிகளை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பா.ம.க. சார்பில் முகாம் அமைத்து, புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். வழக்கமாக 01.01.2024-ஆம் நாளில் 18 வயது நிறைவடைவர்களின் பெயர்கள் மட்டும் தான் புதிதாக சேர்க்கப்படும். இம்முறை 01.04.2024, 01.07.2024, 01.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது நிறைவடைய இருப்பவர்களின் பெயர்களையும் சேர்க்க முடியும் என்பதால், அவர்களையும் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு தொகுதியிலும், வாக்குச்சாவடி வாரியாக பா.ம.க சார்பில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் விவரங்களை கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply