மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்.சி.இ.எல்) ஏற்பாடு செய்திருந்த ‘கூட்டுறவு ஏற்றுமதி குறித்த தேசிய கருத்தரங்கில்’ உரையாற்றினார்.

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, புதுதில்லியில் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்  (என்.சி.இ.எல்) ஏற்பாடு செய்திருந்த ‘கூட்டுறவு ஏற்றுமதி குறித்த தேசிய கருத்தரங்கில்’ உரையாற்றினார்.

என்.சி.இ.எல்லின் லோகோ, வலைத்தளம் மற்றும் கையேட்டை திரு ஷா வெளியிட்டார். மேலும் என்.சி.இ.எல் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திரு. அமித் ஷா தனது உரையில், மகாநவமி நன்னாளில் இன்று தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்  முறையாகத் தொடங்கப்படுகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடியால் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டதன்  தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் பாதையில் இன்று நாம் ஒரு மிக முக்கியமான மைல்கல்லைக் கடக்கிறோம் என்று அவர் கூறினார். தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்  பல்வேறு நோக்கங்களை மனதில் கொண்டு நீண்ட விவாதத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது என்று அவர் கூறினார். ஏற்றுமதியை அதிகரிப்பது, குறிப்பாக விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பது, விவசாயிகளை வளமாக்குவது, பயிர் முறைகளை மாற்றுவது, 2027 க்குள் நாட்டின் 2 கோடி விவசாயிகள் தங்கள் நிலங்களை இயற்கையானது என்று அறிவிக்க உதவுவது ஆகியவை என்.சி.இ.எல் அமைப்பதன் பின்னணியில் உள்ள நமது  இலக்குகளில் அடங்கும் என்று அவர் கூறினார். நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பிரதமர் மோடி பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்று கூறிய அவர்,   இயற்கை விவசாயம் செய்யும் இந்தியாவின் 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின்  தயாரிப்புகளை நல்ல பேக்கேஜிங், நம்பகமான பிராண்டிங் மற்றும் உயர்தர சான்றிதழ்களுடன் உலக சந்தையில் விற்கும் ஒரு பல மாநில கூட்டுறவு சங்கத்தை மோடி  உருவாக்கியுள்ளார் என்று  கூறினார். இதன் மூலம், விவசாயிகள் தங்கள் இயற்கை விவசாயப் பொருட்களின் விலையை விட ஒன்றரை முதல் இரண்டு மடங்கு நேரடியாக பெறுவார்கள். மேலும் இது விவசாயிகளின் செழிப்புக்கு வழிவகுக்கும்.

உயிரி எரிபொருள் கூட்டணியை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.  ஒரே நேரத்தில் 4 பயிர்களை பயிரிடக்கூடிய ஒரே நாடு இந்தியா மட்டுமே என்றும், இந்தப் பயிர்களில் ஒன்றையாவது  உயிரி எரிபொருளுக்கு பயன்படுத்த முடிந்தால், இந்தியாவின் உயிரி எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்து ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் உட்பட நாட்டில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதே என்.சி.இ.எல் அமைப்பதன் மற்றொரு நோக்கம் என்று திரு ஷா கூறினார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புறங்களில் இருந்து வரும் விவசாயப் பொருட்கள்  15 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன, அதே நேரத்தில் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் அவற்றை சார்ந்துள்ளனர் என்று அவர் கூறினார். எந்தவொரு நாடும் அதன் மக்கள்தொகையில் 60 சதவீதத்தை புறக்கணிப்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது, நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தினருக்கு இடம் இல்லாத பொருளாதாரம் ஒருபோதும் வெற்றிகரமாக இருக்க முடியாது. இந்த 60 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களின் செழிப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மோடி அரசு பாடுபடுகிறது. இதைச் செய்வதற்கான ஒரே வழி கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதாகும் என்று திரு ஷா கூறினார். நாட்டின் ஒட்டுமொத்த கூட்டுறவு கட்டமைப்பையும் வலுப்படுத்த தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் பாடுபடும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதியை அதிகரித்தல், விவசாயிகளை வளப்படுத்துதல், பயிர் முறையை மாற்றுதல், அங்ககப் பொருட்களுக்கு உலகளாவிய சந்தையை வழங்குதல், உயிரி எரிபொருளுக்கான உலகளாவிய சந்தையில் இந்தியாவுக்கு ஒரு இடத்தைப் பெறுதல், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துதல் ஆகிய 6 நோக்கங்களுடன் கூட்டுறவுத் துறையில் என்.சி.இ.எல் தொடங்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தப் புதிய தொடக்கத்தின் மூலம், விவசாயிகளுக்கும் பால் பொருட்கள்,  சீரகம், எத்தனால் மற்றும் பல்வேறு வகையான கரிமப் பொருட்களின் உலகளாவிய தேவைக்கும் இடையே ஒரு பாலமாக கூட்டுறவு செயல்படும். இதுவரை சுமார் 1500 கூட்டுறவு சங்கங்கள் என்.சி.இ.எல்-ல் உறுப்பினர்களாக மாறியுள்ளன என்றும், வரும் நாட்களில் ஒவ்வொரு தாலுகாவும் அதில் இணைந்து விவசாயிகளின் குரலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதுவரை என்.சி.இ.எல் ரூ.7,000 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளது. ரூ .15,000 கோடி மதிப்புள்ள ஆர்டர்களுக்கு  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் இப்கோ, கிரிப்கோ மற்றும் அமுல் நிறுவனங்களைப் போலவே, தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனமும் மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான கூட்டுறவு நிறுவனமாக மாறும் என்று கூட்டுறவு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நமது நாட்டின் மொத்த உணவு உற்பத்தியில் 30 சதவீதமும், சர்க்கரை உற்பத்தியில் 30 சதவீதமும், பால் உற்பத்தியில் 17 சதவீதமும் கூட்டுறவுகளின் பங்களிப்பு உள்ளது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறினார். நாட்டின் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியில் சுமார் 42 சதவீதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. சர்க்கரை உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பு 30%. ஆனால் சர்க்கரை ஏற்றுமதியில் ஒரு சதவீதம் மட்டுமே; பால் உற்பத்தியில் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு 17% ஆகவும், பால் பொருட்கள் ஏற்றுமதியில் 2% க்கும் குறைவாகவும் உள்ளது. கூட்டுறவுத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு, விவசாயி, கூட்டுறவு நிறுவனங்கள், உலகளாவிய சந்தை ஆகியவற்றுக்கு இடையே ஒரு இணைப்பாக செயல்பட ஒரு வழி தேவை என்பதையும், தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் அந்த இணைப்பாக செயல்படும் என்பதையும் இது குறிக்கிறது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் சிறு சங்கங்களுக்கு தேவையான நிதி மற்றும் தகவல்களை வழங்கும், ஏற்றுமதி செய்யும் போது சம்பந்தப்பட்ட சிக்கல்கள் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்கும். மேலும் ஏற்றுமதி நட்பு பொருட்களின் உற்பத்திக்கும் பணியாற்றும் என்று திரு ஷா கூறினார்.

இன்று ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் லாபம் விவசாயிகளைச் சென்றடைவதில்லை, ஆனால் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்  மூலம் ஏற்றுமதி லாபத்தில் குறைந்தது 50% விவசாயிகளுக்கு நேரடியாகச் செல்லும் என்று திரு அமித் ஷா கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) விவசாயியிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும், பின்னர் 6 மாத இருப்பு நிலை அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி செலுத்தப்பட்ட தொகைக்கு கூடுதலாக 50 சதவீத லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்குச் செல்லும் என்றும் அவர் கூறினார். இது ஏற்றுமதி செய்யக்கூடிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான விவசாயிகளின் ஆர்வத்தை அதிகரிக்கும். தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் லாபத்தில் மட்டுமல்லாமல்,   விவசாயி மீதும் கவனம் செலுத்துவது அதன் முதன்மை இலக்காக இருக்கும் என்று அவர் கூறினார். ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்றுமதி சார்ந்த மனநிலையை விவசாயிகளிடம் வளர்க்க வேண்டும், பயிர் முறையை மாற்ற வேண்டும் என்றும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதல் முழு முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் இந்த அமைப்பை அமைக்க வேண்டும், அப்போதுதான் 6 குறிக்கோள்களை அடைவதை நோக்கி வெற்றிகரமாக முன்னேற முடியும்.

என்.சி.இ.எல் முழு கூட்டுறவுத் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக மாறும் என்றும், வரும் நாட்களில், கொள்முதல், சேமிப்பு, செயலாக்கம், சந்தைப்படுத்தல், பிராண்டிங், லேபிளிங், பேக்கேஜிங், சான்றிதழ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய  கூட்டுறவு துறை அமைச்சர் கூறினார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது தூதரகங்களுடன் சந்தை இணைப்புகளுக்கான முழு அரசாங்க அணுகுமுறையுடன் இணைப்பதிலும் என்.சி.இ.எல் பணியாற்றும் என்று அவர் கூறினார். இது தவிர, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை ஒருங்கிணைத்து, சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் வகையில், வடிவமைப்பு தயாரிக்கப்படும்.

ஏற்றுமதியை அதிகரிக்கவும், அதன் நன்மைகளை விவசாயிகளுக்கு வழங்க ஒரு சுமூகமான அமைப்பை உருவாக்கவும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று திரு அமித் ஷா கூறினார். பிரதமர் மோடி மூன்று பன்மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளார் – ஒன்று தேசிய அளவில் விதை உற்பத்தி, ஒன்று கரிம பொருட்களின் சான்றிதழ் மற்றும் பிராண்டிங், ஏற்றுமதிக்கு மூன்றாவது கூட்டுறவு சங்கம் என அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply