தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.6,584 கோடிக்கு ஏலம் மூலம் 400 கிலோ மீட்டர் நீளமுள்ள 11 மற்றும் 12 ஆகிய இரண்டு சுங்கச் சாவடிகளின் இயக்கம் செயல்பாடு மற்றும் பரிமாற்ற தொகுப்புகளை இரு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலை 19-ல் உள்ள அலகாபாத் புறவழிச்சாலை மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லலித்பூர் – சாகர் – லக்நாடன் பிரிவு ஆகியவை இந்த இரண்டு தொகுப்புகளில் (11 மற்றும் 12) அடங்கும். இரண்டு தொகுப்புகளுக்கான முதல் சுற்று ஏலம் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஏலம் கோரப்பட்டது. இரண்டாவது சுற்றில், முதல் சுற்றில் பெறப்பட்ட ஏலங்களை விட, 553 கோடி ரூபாய் அதிகமாக ஏலம் பெறப்பட்டது. நிதி ஏலங்கள் 27 அக்டோபர் 2023 வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன, மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதலுடன், நிதி ஏலங்கள் திறக்கப்பட்ட மறுநாளே வெற்றி பெற்ற ஏலதாரர்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை 19-ல் உள்ள 84 கிலோ மீட்டர் நீளமுள்ள அலகாபாத் புறவழிச்சாலைக்கான 11வது தொகுப்பு கியூப் ஹைவேஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்திற்கு ரூ. 2,156 கோடிக்கும், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் வழியாகச் செல்லும் 316 கிலோ மீட்டர் நீளமுள்ள லலித்பூர் – சாகர் – லக்நாடன் பிரிவுக்கான 12-வது தொகுப்பு 12 ஐ.ஆர்.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அறக்கட்டளை என்ற நிறுவனத்துக்கு ரூ.4,428 கோடிக்கும் ஏலம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், “தேசிய பணமாக்கல் இலக்குகளை அடைய அரசு மிகவும் ஆதரவாக உள்ளது. இந்த இரண்டு தொகுப்புகள் மூலம் ரூ.6,584 கோடியை திரட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். இது நாட்டில் உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கும்.” என்றார்.
ஒப்பந்த காலம் 20 ஆண்டுகள் ஆகும். இதில் ஒப்பந்ததாரர்கள் இந்த பகுதியை பராமரித்து இயக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கட்டண விகிதங்களுக்கு ஏற்ப கட்டணங்களை இந்த நிறுவனங்கள் வசூலிக்கும்.
நெடுஞ்சாலைத் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக டிஓடி எனப்படும் சுங்கச்சாவடி செயல்பாடு, இயக்கம் மற்றும் பரிமாற்ற (TOT) மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவ்வப்போது பல்வேறு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளின் சுங்கச் சாவடிகளை இயக்குதல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா