குஜராத்தின் மெஹ்சானாவில் சுமார் ரூ.5800 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத்தின் மெஹ்சானாவில் சுமார் 5800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரயில், சாலை, குடிநீர், நீர்ப்பாசனம் போன்ற பல துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகள் அனைவருக்கும் பெரும் உத்வேகத்தை அளிப்பதாகும். முந்தைய தேதி கோவிந்த் குரு அவர்களின் நினைவு நாள், பிந்தையது சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாள் என்று குறிப்பிட்டார். “உலகின் மிகப்பெரிய சிலையான ஒற்றுமை சிலையை அமைத்ததன் மூலம் சர்தார் சாஹேப் மீதான தனது மரியாதையை எங்கள் தலைமுறை வெளிப்படுத்தியுள்ளது” என்று திரு மோடி கூறினார். கோவிந்த் குருவின் வாழ்க்கை இந்திய சுதந்திரத்தில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாகும் என்று அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக, மங்கர் தாமின் முக்கியத்துவத்தை அரசு தேசிய அளவில் நிறுவியதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

முன்னதாக அம்பாஜி கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்ததைக் குறிப்பிட்ட பிரதமர், அம்பாஜி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். கப்பார் பர்வத்தை மேம்படுத்தவும், அதன் பெருமையை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் பாராட்டினார். இன்றைய திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அம்பே பகவானின் ஆசியுடன் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் இணைப்பை மேலும் மேம்படுத்தும் மற்றும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார். “மெஹ்சானா, பதான், பனஸ்கந்தா, சபர்காந்தா, மஹிசாகர், அகமதாபாத் மற்றும் காந்திநகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் இந்தத் திட்டங்களால் பயனடையும்” என்று அவர் மேலும் கூறினார். இன்றைய திட்டங்களுக்காக குஜராத் மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

“இந்தியாவின் வளர்ச்சிக் கதை உலகெங்கிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது” என்று பிரதமர் கூறினார். நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் தரையிறங்கியதையும், வெற்றிகரமான ஜி 20 தலைவர் பதவியையும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய தீர்மான உணர்வைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் மதிப்பு உயர மக்கள் சக்தியே காரணம் என்றார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எடுத்துரைத்த அவர், நீர் சேமிப்பு, நீர்ப்பாசனம் மற்றும் குடிநீருக்கான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார். சாலைகள், ரயில்கள் அல்லது விமான நிலையங்கள் எதுவாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். இது, இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

நாட்டின் பிற பகுதிகள் இன்று அனுபவித்து வரும் வளர்ச்சிப் பணிகளை குஜராத் மக்கள் ஏற்கனவே பார்த்துள்ளனர் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். “மோடி எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும், அதை அவர் நிறைவேற்றுகிறார்” என்று பிரதமர் குறிப்பிட்டார். விரைவான வளர்ச்சிக்கு குஜராத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், வடக்கு குஜராத் உட்பட முழு மாநிலமும் இதன் மூலம் பயனடைந்துள்ளது என்றார்.

குடிநீர் மற்றும் பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாததால் முழு வடக்கு குஜராத் பிராந்தியத்திலும் வாழ்க்கை கடினமாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், பால் வணிகம் பல சிரமங்களை எதிர்கொண்டது, எந்த உறுதியும் இல்லாமல் விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு பயிரை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது என்றார். இப்பகுதியைப் புத்துயிரூட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துரைத்த திரு மோடி, இங்கு நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் குறிப்பிட்டார். “வடக்கு குஜராத்தின் விவசாயத் துறை மற்றும் தொழில்துறையை மேம்படுத்த நாங்கள் பணியாற்றினோம்” என்று அவர் தெரிவித்தார். வடக்கு குஜராத் மக்களுக்கு முடிந்தவரை பல புதிய வருமான வழிகளை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று அவர் கூறினார். குஜராத்தின் வளர்ச்சிக்கு நர்மதா மற்றும் மாஹி நதிகளின் நீரைப் பயன்படுத்தும் சுஜாலம்-சுபாலம் திட்டத்தை அவர் எடுத்துரைத்தார். சபர்மதியில் அதிகபட்ச நன்மைகளை உறுதி செய்வதற்காக 6 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாக திரு மோடி தெரிவித்தார் . “இந்தத் தடுப்பணைகளில் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமது விவசாயிகளும் டஜன் கணக்கான கிராமங்களும் இதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள்”, என்று அவர் கூறினார்.

இந்த நீர்ப்பாசனத் திட்டங்களால் 20-22 ஆண்டுகளில் வடக்கு குஜராத்தில் நீர்ப்பாசனத்தின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். அரசால் வழங்கப்பட்ட நுண்ணீர் பாசனத்தின் புதிய தொழில்நுட்பம் வடக்கு குஜராத் விவசாயிகளால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறிய அவர், பனஸ்கந்தாவில் 70 சதவீத பகுதி புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு திருப்தி தெரிவித்தார். விவசாயிகள் பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் கோதுமை, ஆமணக்கு, நிலக்கடலை, பயறு போன்ற பல பயிர்களை இப்போது பயிரிடலாம். நாட்டின் 90 சதவீத இசப்கோல் குஜராத்தில் பதப்படுத்தப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். மேலும், உருளைக்கிழங்கு, கேரட், மாம்பழம், நெல்லிக்காய், மாதுளை, கொய்யா, எலுமிச்சை ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார். உருளைக்கிழங்குக்கான இயற்கை விவசாய மையமாக தீசாவை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பனஸ்கந்தாவில் உருளைக்கிழங்கு பதப்படுத்துவதற்காக ஒரு பெரிய ஆலையை அமைப்பது பற்றி திரு மோடி குறிப்பிட்டார். மெஹ்சானாவில் அமைக்கப்பட்ட வேளாண் உணவுப் பூங்கா பற்றி குறிப்பிட்ட அவர், பனஸ்கந்தாவில் இதேபோன்ற மெகா உணவுப் பூங்காவை உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவது குறித்துப் பேசிய திரு மோடி, குஜராத்தில் தொடங்கப்பட்ட நீர் சேமிப்புத் திட்டம் இப்போது நாட்டிற்கான ஜல் ஜீவன் இயக்க வடிவத்தை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். “அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம், குஜராத்தைப் போலவே, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது” என்று அவர் கூறினார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் வளர்ச்சியில் பெண்கள் மிகப்பெரிய பயனாளிகளாக உள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, வடக்கு குஜராத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான புதிய கால்நடை மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன, இதன் விளைவாக கால்நடைகளின் நல்ல ஆரோக்கியமும் அதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார். கடந்த இரண்டு தசாப்தங்களில், வடக்கு குஜராத்தில் 800 க்கும் மேற்பட்ட புதிய கிராம பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். “பனாஸ் டெய்ரி, தூத் சாகர் அல்லது சபர் டெய்ரி எதுவாக இருந்தாலும், அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவுபடுத்தப்படுகின்றன. பால் தவிர, விவசாயிகளின் பிற விளைபொருட்களுக்கான பெரிய பதப்படுத்தும் மையங்களாகவும் இவை மாறி வருகின்றன”, என்று அவர் மேலும் கூறினார். கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசு ஒரு பெரிய இயக்கத்தை நடத்தி வருகிறது இதற்கு ரூ .15,000 கோடி செலவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கோபர்தன் திட்டத்தின் கீழ் பல ஆலைகள் அமைப்படுவது பற்றியும் அங்கு மாட்டு சாணத்திலிருந்து எரிவாயு மற்றும் பயோ சி.என்.ஜி தயாரிக்கப்படுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு குஜராத்தில் ஆட்டோமொபைல் துறையின் விரிவாக்கம் குறித்து பேசிய திரு மோடி, மண்டல்-பெச்சார்ஜி ஆட்டோமொபைல் மையத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார். இது வேலை வாய்ப்புகளையும் மக்களின் வருவாயையும் அதிகரித்துள்ளது. “இங்குள்ள தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. உணவு பதப்படுத்துதல் தவிர, மருந்துத் தொழில் மற்றும் பொறியியல் துறையும் மெஹ்சானாவில் வளர்ந்துள்ளன. பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் பீங்கான் தொடர்பான தொழில்கள் வளர்ந்துள்ளன” என்று திரு. மோடி மேலும் கூறினார்.

ரூ.5000 கோடிக்கும் அதிகமான ரயில்வே திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, மெஹ்சானா- அகமதாபாத் இடையேயான சிறப்பு சரக்கு வழித்தடம் பற்றியும் குறிப்பிட்டார். இது பிபாவாவ், போர்பந்தர், ஜாம்நகர் போன்ற பெரிய துறைமுகங்களுடன் வடக்கு குஜராத்தின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். இது வடக்கு குஜராத்தில் தளவாடங்கள் மற்றும் இருப்பு வைத்தல் தொடர்பான துறையை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாட்டில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய சக்தி உற்பத்தி குறித்து பேசிய பிரதமர், பதானிலும் பின்னர் பனஸ்கந்தாவிலும் உள்ள சூரிய சக்தி பூங்கா பற்றி எடுத்துரைத்தார். 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கும் கிராமம் என்று மொதேரா பெருமை கொள்கிறது என்றார் அவர். “இன்று, மேற்கூரை சூரிய சக்திக்கு அரசு உங்களுக்கு அதிகபட்ச நிதி உதவியை வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் மின் கட்டணத்தையும் குறைப்பதே எங்கள் முயற்சி”, என்று அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 2,500 கி.மீ கிழக்கு மற்றும் மேற்கு சிறப்பு சரக்கு வழித்தடங்கள் முடிக்கப்பட்டுள்ளன, இது பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களின் பயண நேரத்தைக் குறைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். பாலன்பூரிலிருந்து ஹரியானாவின் ரேவாரிக்கு ரயில்கள் மூலம் பால் கொண்டு செல்லப்படுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார். “இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கடோசன் சாலை-பெச்சாராஜி ரயில் பாதை மற்றும் விராம்காம்-சமகாயாலி பாதையை இரட்டிப்பாக்கும் பணி ஆகியவை இணைப்பை வலுப்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார்.

குஜராத்தில் சுற்றுலாவின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த பிரதமர், உலகப் புகழ் பெற்ற கட்ச் ரான் உத்சவ் பற்றியும், சமீபத்தில் உலகின் சிறந்த சுற்றுலா கிராமமாக அங்கீகரிக்கப்பட்ட கட்ச்சின் தோர்டோ கிராமம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். வடக்கு குஜராத் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு முக்கியமான சுற்றுலா மையமாக மாறி வரும் நடாபெட்டின் உதாரணத்தை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஒரு பெரிய சுற்றுலா மையமாக உருவாக்கப்பட்டு வரும் தாரோய் பற்றியும் அவர் குறிப்பிட்டார். மெஹ்சானாவில் உள்ள மோதேரா சூரியன் கோயில், நகரின் மையத்தில் எரியும் அகண்ட ஜோதி, வாட்நகரின் கீர்த்தி தோரன் மற்றும் பிற நம்பிக்கை மற்றும் ஆன்மீகத் தலங்கள் பற்றியும் திரு மோடி எடுத்துரைத்தார். பண்டைய நாகரிகத்தின் சுவடுகளை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சிகளைக் குறிப்பிட்டு வாட்நகர் முழு உலகையும் ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். ” ரூ.1,000 கோடி செலவிலான பாரம்பரிய சுற்றுலாக்களின் கீழ் இங்குள்ள பல இடங்களை மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது” என்று கூறிய பிரதமர், ராணி கி பாவ்வின் உதாரணத்தைக் கூறினார், இது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. “முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது பாரம்பரியத்தை வளர்ச்சியுடன் இணைக்கும் பணி நாட்டில் இன்று மேற்கொள்ளப்படுகிறது. இவை வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதியை மேலும் வலுப்படுத்தும்” என்று கூறி தமது உரையைப் பிரதமர் நிறைவு செய்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பாட்டீல், மத்திய இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் மேற்கு சிறப்பு சரக்கு நடைபாதையின் (டபிள்யூ.டி.எஃப்.சி) நியூ பாண்டு-நியூ சனந்த் (என்) பிரிவு ; விராம்காம் – சமகியாலி ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்; கடோசன் சாலை – பெச்ராஜி – மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் (எம்.எஸ்.ஐ.எல் சைடிங்) ரயில் திட்டம்; மெஹ்சானா மற்றும் காந்திநகர் மாவட்டத்தின் விஜாபூர் தாலுகா மற்றும் மான்சா தாலுகாவின் பல்வேறு கிராம ஏரிகளை செறிவூட்டுவதற்கான திட்டம்; மெஹ்சானா மாவட்டத்தில் சபர்மதி ஆற்றின் மீது வலசானா தடுப்பணை; பாலன்பூர், பனஸ்கந்தாவில் குடிநீர் வழங்குவதற்கான இரண்டு திட்டங்கள்; மற்றும் தாரோய் அணையை அடிப்படையாகக் கொண்ட பாலன்பூர் லைஃப்லைன் திட்டம் – ஹெட் ஒர்க் (எச்.டபிள்யூ) மற்றும் 80 எம்.எல்.டி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அடங்கும்.

பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் கெராலுவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் அடங்கும்; மஹிசாகர் மாவட்டத்தின் சாந்த்ராம்பூர் தாலுகாவில் நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கான திட்டம்; நரோடா – தெஹ்காம் – ஹர்சோல் – தன்சுரா சாலை, சபர்கந்தாவை அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்; காந்திநகர் மாவட்டத்தில் கலோல் நகர்பாலிகா கழிவுநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டம்; மற்றும் சித்பூர் (பதான்), பாலன்பூர் (பனஸ்கந்தா), பயாட் (ஆரவல்லி) மற்றும் வத்நகர் (மெஹ்சானா) ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திட்டங்கள் ஆகியவையும் இதில் உள்ளன.

திவாஹர்

Leave a Reply