பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.

திருநெல்வேலி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய இரு பட்டியலின இளைஞர்களை அப்பகுதி வழியாக வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் பெய்து, தாக்கி, மிரட்டிப் பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துச் சென்றதாக தகவல்கள் வருகின்றன.

இச்செயல் மன்னிக்கவே முடியாத கடும் கண்டனத்திற்கு உரியதாகும். குற்றவாளிகள் ஆறு பேரை காவல்துறை உடனடியாகக் கைது செய்துள்ளது. இக்குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறைக்கு உள்ளது.

ஒரு சிலரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே வளர்ந்து வரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
மனிதநேயத்தையும், சமூக ஒற்றுமையையும் பேணிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் இச்செயல் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதுபோன்ற சமூக விரோத சக்திகளின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்து, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்திட தொடர்ந்து விழிப்பாக இருந்து கண்காணித்திட வேண்டுமென மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply