2023 அக்டோபரில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 78.65 மில்லியன் டன்னை எட்டியது .

நிலக்கரி அமைச்சகம் 2023 அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவாக  78.65 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 66.32 மில்லியன்  டன் என்பதை விட 18.59% அதிகரித்துள்ளது. கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) உற்பத்தி இந்த ஆண்டு அக்டோபரில் 61.07 மில்லியன்  டன்னாக அதிகரித்துள்ளது, இது 2022 அக்டோபரில் 52.94 மில்லியன்  டன்னாக இருந்தது. ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (அக்டோபர் 2023 வரை) 2022-23 நிதியாண்டில் 448.49 மில்லியன் டன்னிலிருந்து 2023-24 நிதியாண்டில் 507.02 மில்லியன்  டன்னாக கணிசமாக அதிகரித்து, 13.05 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

கூடுதலாக, நிலக்கரி அனுப்புதல் 2023 அக்டோபரில் குறிப்பிடத்தக்க ஊக்கத்துடன், 79.30 மில்லியன்  டன்னை எட்டியது, இது 2022 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 67.13 மில்லியன்  டன்னுடன் ஒப்பிடும்போது 18.14% வளர்ச்சி விகிதத்துடன் சிறந்த  முன்னேற்றத்தைக் காட்டியது. கோல் இந்தியா நிறுவனம்  (சி.ஐ.எல்) அனுப்புதல் அளவு 2022 அக்டோபரில் 53.69 மில்லியன் டன் என்பதுடன் ஒப்பிடும்போது, 2023 அக்டோபரில் 61.65 மில்லியன் டன்னை எட்டியது, இது 14.83% வளர்ச்சியைக் குறிக்கிறது. 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.98% வளர்ச்சியுடன் 483.78 மில்லியன் டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் (அக்டோபர் 2023 வரை) 23-24 நிதியாண்டில் 541.73 மில்லியன் டன்னாக கணிசமாக உயர்ந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி, அனுப்புதல் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நாட்டின் முன்னேறி வரும் எரிசக்தி தன்னிறைவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரவிருக்கும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. தொடர்ச்சியான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதில் நிலக்கரி அமைச்சகம் உறுதியாக உள்ளது, இதன் மூலம் நாட்டின் தற்போதைய வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் நம்பகமான எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply