கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவுபடி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லில் நெற்று கூடி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையின்படி, தமிழகத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வரை தினந்தோறும் 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா அரசு கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்காமல் தொடர்ந்து நிராகரித்துள்ளது குறிப்பிடதக்கது. நேற்று 03.11.2023 டெல்லியில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தமிழக விவசாயத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வரை தினந்தோறும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்திரவை தவறாமல் நிறைவேற்ற காவிரி மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். காநாடகா அரசு மீண்டும் தவறும் பட்சத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் தற்பொழுது உள்ள நிலையை ஆராய்ந்து உண்மை தன்மைக்கு ஏற்றவாறு தன்னிச்சை அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையமே உரிய ஆலோசனை செய்து நேரடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

தமிழகம் பெரிதும் நம்பியிருக்கும் வடகிழக்கு பருவமழை கூட முறையாக பெய்யாமல், மழை பொழிவு குறைவாகவே இருப்பது துரதிஷ்டம். வழக்கமாக அக்டோபர் 15 முதல் 25-ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும், ஆனால் தற்பொழுது காலதாமதமாக துவங்கியள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழை இயல்பை விட 40% குறைவுவாக பெய்திருக்கிறது. இதுவரை 19 செமீ பெய்திருக்க வேண்டிய மழை தற்பொழுது 12 செ.மீ அளவுதான் பதிவாகியிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

ஆகவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க காவிரி மேலாண்மை ஆணையம் மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply