உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நாட்டில் விவசாயக் கல்வி மற்றும் விவசாயத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது என்றார் .
தொடக்கத்தில் இருந்து, இது விவசாயக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த மையமாக மாறியுள்ளது. 11,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நோபல் பரிசு பெற்ற டாக்டர் நார்மன் போர்லாக், பந்த்நகர் பல்கலைக்கழகத்தை ‘பசுமைப் புரட்சியின் முன்னோடி’ என்று குறிப்பிட்டார் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
நார்மன் போர்லாக் உருவாக்கிய மெக்சிகன் கோதுமை வகைகள் இந்த பல்கலைக்கழகத்தில் பரிசோதிக்கப்பட்டன. பசுமைப் புரட்சியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ‘பந்த்நகர் விதைகள்’ பற்றித் தெரியும்.
பந்த்நகர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட விதைகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் பயிர் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியில் பந்த்நகர் பல்கலைக்கழகம் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்திக்கு விவசாயத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இப்பல்கலைக்கழகம் பல்வேறு தட்பவெப்பநிலையை தாங்கும் தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப்புற சமூகத்திற்கு உதவுவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறைமை இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் விருப்பம் தெரிவித்தார். வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகில் போட்டியிடக்கூடிய தொழில்துறைக்கு தயாராக உள்ள பட்டதாரிகளை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காலநிலை மாற்றம் மற்றும் மண் சீரழிவு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க இன்று உலகம் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பழக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது. நமது உணவுப் பழக்கத்தில் சிறுதானியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்றும் குடியரசுத்தலைவர் கூறினார்.
எஸ் சதிஷ் சர்மா