புதுதில்லியில் இன்று (நவம்பர் 16, 2023) நடைபெற்ற 3-வது கணக்குத் தணிக்கை தின விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தலைமையின் கீழ், சிறந்த நிர்வாகம் மற்றம் தணிக்கை முறைகளைக் கட்டமைப்பதில், அரசின் கணக்கு தணிக்கை அமைப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மக்கள் வேகமாக முன்னேற விரும்புவதாக குடியரசுத்தலைவர் கூறினார். தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம் உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நிறுவனங்களும், அமைப்புகளும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தரவு மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்தை நிறுவுவது உட்பட பல முன்னோக்கிய நடவடிக்கைகளை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பிற நவீன முறைகள் எதிர்காலத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு நட்புடன் வழிகாட்டியாகவும் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலக குழு பங்களிப்பை வழங்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதில் இந்தக் குழு முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும், நெறிமுறைகளின் அடிப்படையில் போட்டித் திறன் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை உட்பட நல்லாட்சிக்கு பொறுப்பான ஒவ்வொரு நிறுவனமும் தனிநபரும் பயனுள்ள பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். கணக்குத் தணிக்கையாளர்கள் நல்லாட்சிக்கான ஒத்தழைப்பாளர்களாக கருதப்பட வேண்டுமே தவிர, அவர்களை விமர்சகர்களாக பார்க்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
உலக சமூகத்தில் இந்தியாவின் முன்னணி நிலை தணிக்கைத் துறையிலும் தெரிகிறது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா