இந்தியக் காவல் பணியின் (ஐபிஎஸ்) 75 ஆர்ஆர் (2022-ம் ஆண்டு தொகுதி) பயிற்சி அதிகாரிகள் குழுவினர் இன்று (நவம்பர் 18, 2023) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கின் முக்கியப் பொறுப்பு மாநில அரசுகளின் வசம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், மாநில அரசுகளால் நியமிக்கப்படும் காவல்துறையினரை ஐபிஎஸ் அதிகாரிகள் வழிநடத்துவதாவும். அந்த வகையில், காவல் துறையை அகில இந்திய அளவில் ஒருங்கிணைக்கும் பணியை இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது இன்றியமையாதது என குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். உலக அளவிலும், தேசிய அளவிலும், உள்நாட்டுப் பகுதிகளிலும், சட்டம் ஒழுங்கு வலுவாக இல்லாத இடங்களில் தொழில்முனைவோர் முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதனால், எந்தவொரு பகுதியின் பன்முக வளர்ச்சியிலும் காவல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகனின் திறமை மற்றும் திறனை மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். அனைத்து மக்களும் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பாளர்களாக மாறுவது நமது தேசிய முன்னுரிமையாகும் என்று அவர் தெரிவித்தார். அமிர்த காலத்தின் போது நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் காவல்துறை அதிகாரிகளும் மிக முக்கியப் பங்கை வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதிலும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதிலும் காவல்துறையினர் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இணையதளக் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் என பல சவால்கள் காவல் துறைக்கு உள்ளன என்று அவர் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் செல்வாக்கின் காரணமாக சூழ்நிலைகள் மாறுகின்றன என்றும் குற்றவாளிகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். எனவே காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தொழில்நுட்பத் திறனில் தங்களை மேம்படுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்