உலக சுகாதார அமைப்பும் ஆயுஷ் அமைச்சகமும் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆயுஷ் அமைச்சகமும் உலக சுகாதார நிறுவனமும் நேற்றிரவு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன.

ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு இந்திரா மணி பாண்டே, உலக சுகாதார அமைப்பின் சார்பாக உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை பாடப்பிரிவின் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் புரூஸ் அய்ல்வார்ட்டும் கையெழுத்திட்டனர்.

பாரம்பரிய மற்றும் துணைமருத்துவ முறைகளைத் தரப்படுத்துவதும், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தேசிய சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதும், அவற்றை சர்வதேச அளவில் பரப்புவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம், பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ முறைகளை தேசிய சுகாதார அமைப்பின் முதன்மை நீரோட்டத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உத்தி 2025-34 என்ற ஆவணம் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் உலக சுகாதார நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் பிற முக்கிய நோக்கங்கள் துணை மருத்துவ முறை ‘சித்தா’ துறையில் பயிற்சி மற்றும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், பாரம்பரிய மற்றும் துணை மருந்துகளைப்  பட்டியலிடுவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல், பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய முயற்சிகள்  அடங்கும்.

இந்த நிகழ்வில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், பண்டைய காலங்களிலிருந்து பல பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறைகளின் கலாச்சார மையமாக இந்தியா இருந்து வருகிறது என்றார்.

தேசிய சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் இத்தகைய உலகளாவிய முயற்சிகள் நிச்சயமாக சுகாதார சேவைகள் துறையில் இந்தியாவுக்கு ஓர் உலகளாவிய அடையாளத்தை வழங்கும்.  இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும். அமைச்சகத்தின் இந்த முயற்சி இந்தியாவின் உலகளாவிய வெற்றியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையாகும்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், 2023-28, பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ முறையின் உலகளாவிய வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று  ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா  மெய்நிகர் செய்தியில் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரி புரூஸ் அய்ல்வார்டின் கூற்றுப்படி, இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ முறைகளை இந்தியாவின் தேசிய சுகாதார அமைப்பின் முதன்மை  நீரோட்டத்தில் கொண்டு வருவதோடு உலகளாவிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வின் நோக்கத்திற்கு சேவை செய்யும்.

இந்திய அரசின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே, “உலக அளவில் பாரம்பரிய மருத்துவ முறைகளை வலுப்படுத்தவும், குறிப்பாக  வளரும் சக நாடுகளுக்கு அவர்களின் சொந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதில் ஆதரவளிக்கவும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்று கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே இரண்டு ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில்’ கையெழுத்திட்டுள்ளன. யோகா, ஆயுர்வேதம், யுனானி, பஞ்சகர்மா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல முதல் ஒப்பந்தமும், ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளை வலுப்படுத்த 2017 ஆம் ஆண்டில் இரண்டாவது ஒப்பந்தமும் கையெழுத்தானது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply