உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் (பி.எல்.ஐ.) திட்டத்தில் செல்பேசிகளுக்கான வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகளுக்கான பி.எல்.ஐ திட்டம் – 2.0 க்கு, 2023, மே 17 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், அனைத்தும் அடங்கிய சுய கணினிகள் (பிசி) உள்ளிட்ட சாதனங்களை உள்ளடக்கியதாகும்.
இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில் 27 கணினிக் கருவிகள் உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்களுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஏசர், ஆசஸ், டெல், ஹெச்பி, லெனோவா போன்ற பிரபலமான நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப கணினிக் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
இந்த ஒப்புதலின் காரணமாக மொத்தம் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ரக்கப்படுகிறது. மேலும் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கணினிக் கருவிகள் உற்பத்தி செய்யப்படும்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அங்கீகரிக்கப்பட்ட 27 விண்ணப்பதாரர்களில் 23 பேர் உடனடியாக உற்பத்தியைத் தொடங்கத் தயாராக உள்ளனர் என்றார்.
எஸ்.சதிஸ் சர்மா