மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு),பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர் திரு. ஹீராலால் சமாரியா இன்று சந்தித்தார்.
இந்த ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 90 சதவீத மனுக்களுக்கும் அதிகமாக தீர்வு அளிக்கப்பட்டது குறித்து அவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளாக தகவல் ஆணையராக பணியாற்றி வந்த சமாரியா, 2023 நவம்பர் 6 அன்று தலைமைத் தகவல் ஆணையராகப் பதவியேற்ற பின்னர், அமைச்சருடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
அமைச்சருடனான ஒரு மணி நேர சந்திப்பின் போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மேல்முறையீடுகள், புகார்களின் தீர்வு விகிதம், நடப்பு 2023-24 நிதியாண்டில் முதல் முறையாக 90% ஐத் தாண்டியுள்ளது என்று திரு சமாரியா தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடுகளின் தீர்வு அதிகரிப்புடன் நிலுவையில் உள்ள மனுக்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.
2023 நவம்பர் 9, நிலவரப்படி, 11,499 ஆர்டிஐ மேல்முறையீடுகள், புகார்கள் தீர்க்கப்பட்டன , அதே நேரத்தில் மொத்தம் 12,695 மனுக்கள் பெறப்பட்டன, இது 90.5% தீர்வு விகிதத்தைக் குறிக்கிறது.
2022-23 ஆம் ஆண்டில், மொத்தம் 19,018 மேல்முறையீட்டு மனுக்களும், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 19,604 மேல்முறையீடுகளும், 2020-21 ஆம் ஆண்டில் மொத்தம் 19,183 தகவல் அறியும் உரிமை மேல்முறையீட்டு மனுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2022-23 ஆம் ஆண்டில் 29,210 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 2021-22 ஆம் ஆண்டில் 28,793 மேல்முறையீட்டு மனுக்களுக்கும், 2020-21 ஆம் ஆண்டில் 17,017 மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டில் நிலுவையில் உள்ள தகவல் அறியும் உரிமை மேல்முறையீட்டு மனுக்களும் இதில் அடங்கும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கவும், ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் நடைமுறைக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய முதல் அரசு அமைப்பு என்ற பெருமையை தலைமைத் தகவல் ஆணையத்தின் அலுவலகம் பெற்றுள்ளது என்று அமைச்சர் பாராட்டினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கும் தீர்ப்பதற்கும் சிஐசி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரடி முறை மற்றும் காணொலிக் காட்சி முறை குறித்தும் தலைமைத் தகவல் ஆணையர் அமைச்சரிடம் விவரித்தார்.
திவாஹர்