மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா-அமெரிக்கா கூட்டுப் பயிற்சி வஜ்ரா பிரஹார் தொடங்கியது .

14-வது இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி “வஜ்ரா பிரஹார் 2023” இன்று உம்ரோயில் உள்ள கூட்டுப் பயிற்சி மையத்தில் தொடங்கியது. அமெரிக்க படைப்பிரிவுக்கு, அமெரிக்க சிறப்புப் படைகளின் 1-வது சிறப்புப் படைக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்திய ராணுவப் பிரிவுக்கு கிழக்கு கமாண்டைச் சேர்ந்த சிறப்புப் படை வீரர்கள்  தலைமை தாங்குகின்றனர்.

வஜ்ரா பிரஹார் பயிற்சி என்பது இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவ சிறப்புப் படைகள் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சியாகும். கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு உத்திகள் போன்ற பகுதிகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் பயிற்சி இந்தியாவில் 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப் படைகளின் 13 வது பயிற்சி பக்லோவில் உள்ள சிறப்புப் படைகள் பயிற்சி பள்ளியில் நடத்தப்பட்டது. தற்போதைய பதிப்பு மேகாலயாவின் உம்ராய் கன்டோன்மென்டில் 2023 நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை நடத்தப்படுகிறது.

அடுத்த மூன்று வாரங்களில், மலைப்பாங்கான நிலப்பரப்பில் வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் சிறப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி நடவடிக்கைகள் ஆகியவற்றை இரு தரப்பினரும் கூட்டாகத் திட்டமிட்டு ஒத்திகை செய்வார்கள்.

வஜ்ர பிரஹார் பயிற்சி இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு முறையாக உருவெடுத்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்களுக்கு இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாகும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply