ஆழ்கடல் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்!-மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

இந்தியாவின் மீன்வள உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நீலப்புரட்சி, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா போன்ற திட்டங்களின் மூலம் பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறுவதற்கு ஆதரவளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அகமதாபாதில் உள்ள குஜராத் அறிவியல் நகரத்தில் நடைபெறும் உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023-ல் தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் பொருளாதாரம் குறித்த அமர்வில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று இதனைத் தெரிவித்தார் .

பாரம்பரிய மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற அரசு 60 சதவீதம் வரை நிதியுதவி அளித்து வருகிறது என்றும் அவர் கூறினார். இந்த மாற்றத்திற்கு வசதியாக கடன் வசதிகளும் கிடைக்கின்றன. சூரை மீன் போன்ற ஆழ்கடல் வளங்களுக்கு சர்வதேச தரத்தைப் பராமரிக்க உள்ளமைக்கப்பட்ட பதப்படுத்தும் வசதிகளுடன் கூடிய நவீன மீன்பிடி கப்பல்களின் தேவையை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய மீனவர்களுக்கு தற்போது இந்தத் திறன்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட டாக்டர் முருகன், இந்த இடைவெளியை சரி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உலகளவில் சூரை மீன்களுக்கு அதிக தேவை இருப்பதாகவும் , இந்தியா சூரை மீன்பிடிப்பை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் டாக்டர் முருகன் ,மேலும் கூறினார். ஆழ்கடல் மீன்பிடிப்புத் துறையில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நுழைய வேண்டும் என்றும், எரிபொருள் செலவைக் குறைப்பது மற்றும் மீன்பிடி படகுகளில் பசுமை எரிபொருள்களைப் பயன்படுத்துவது பற்றி  ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

எஸ் சதிஷ் சர்மா

Leave a Reply