கனரக இயந்திரங்களின் உள்நாட்டு உற்பத்திக்கான உயர்மட்டக் குழு நிலக்கரி அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது

இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் வலுவான அர்ப்பணிப்புடன், நிலக்கரி சுரங்கத் துறையில் உள்நாட்டு உற்பத்தி திறன்களை வளர்ப்பதற்கு நிலக்கரி அமைச்சகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிலத்தைத்தோண்டும் கனரக எந்திரங்கள், சுரங்கப்பணிக்கான உபகரணங்கள், குறைவான திறன் கொண்ட சுரங்கப்பணி உபகரணங்கள் மற்றும் அது சார்ந்த எந்திரங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க இந்திய நிலக்கரி நிறுவன இயக்குநர் (தொழில்நுட்பம்) தலைமையில் ஒரு பல்துறை உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டிற்குப் பிறகும் நிலக்கரி முக்கிய எரிசக்தி ஆதாரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் சுரங்கங்களுக்கு மிகப்பெரிய அளவிலான உபகரணங்கள் தேவைப்படும் என்று குழு எதிர்பார்த்து அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. கனரக தொழில்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், எஸ்.சி.சி.எல், என்.எல்.சி.ஐ.எல், என்.டி.பி.சி.எல், டபிள்யூ.பி.பி.டி.சி.எல், பி.இ.எம்.எல், கேட்டர்பில்லர், டாடா ஹிட்டாச்சி, கெய்ன்வெல், தொழில் சங்கங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இருந்தனர்.

தற்போது, இந்திய நிலக்கரி நிறுவனம் ரூபாய் 3500 கோடி மதிப்பிலான உயர் திறன் கொண்ட உபகரணங்களை இறக்குமதி செய்கிறது, இது சுங்க வரியில் ரூ .1000 கோடி கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், அடுத்த ஆறு ஆண்டுகளில் படிப்படியாக இறக்குமதியைக் குறைக்க, இந்திய நிலக்கரி நிறுவனம், திட்டத்தை வகுத்துள்ளது. இந்த அணுகுமுறை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை ஊக்குவிப்பதையும் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திவாஹர்

Leave a Reply