அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு தேயைான மூலப்பொருள்கள் அங்குள்ள விவசாய நிலங்களில் கிடைப்பதால் அரசின் வேண்டுகொளுக்கு இணங்க 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை அளித்தார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் 30 ஆண்டுகளாக காலம் தாழ்த்துவது கண்டிக்கதக்கது.
விவசாயிகள் தங்களின் வாழ்வாதராமான விவசாய நிலங்களை அரசு சிமெண்ட் ஆலைக்கு அளித்து தற்பொழுது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக கிடைக்க கூடிய இழப்பீடும் கொடுக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் போது ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் இழப்பீடு அளிப்பதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தது.
ஆனால் விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு போதுமானதாக இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்றம் ஏக்கர் ஒன்றுக்கு 1.20 லட்சம் இழப்பீடும், இதுவரையான வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 8 லட்சம் வழங்க உத்திரவிட்டது. ஆனால் அதை நிறைவேற்றாமல் அரசு மேல் முறையீடு சென்றது.
இந்நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் கோட்டாச்சியர் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சுரங்கம் அமைக்க நிலம் அளித்தவர்களிடம் “கருத்துக் கேட்பு கூட்டம்” நடத்த வந்த போது அவர்களிடம், உரிய இழப்பீடை வழங்கிவிட்டு சுரங்கம் அமைக்க அணுமதிக்கிறோம் என்று விவசாயிகள் கூறிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்பொழுது 28.11.2023 அன்று மாசு கட்டுப்பாடு வாரியம் மீண்டும் கருத்துகேட்பு கூட்டத்தை நடத்த உள்ளது.
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் அளித்தவர்களின் நியாயமான, அவர்களின் தார்மீக உரிமைய புறக்கணித்துவிட்டு சுரங்கம் அமைக்க முயற்சி செய்யும் நிர்வாகத்தை எதிர்த்து நிலம் இழந்த விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டடத்தை அறிவித்துள்ளார்கள். 30- ஆண்டு கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசும், அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகமும் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரம் காக்க உரிய இழப்பீடையும், அரசு அளித்த உத்திரவாதத்தின்படி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்