முன்னணி ‘போர்க்கப்பல் திட்டமான ’15 பி திட்டத்தின்’ கீழ் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் மூன்றாவது கப்பலான யார்டு 12706 (இம்பால்)-இன் சின்னம், நவம்பர் 28 அன்று புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 2019 இல் இம்பால் என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், அக்டோபர் 20, 23 அன்று எம்.டி.எல் நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. அதன் முன்னோட்ட -செயல்பாட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக, கப்பல், தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை சமீபத்தில் வெற்றிகரமாக ஏவியது. இது, கப்பல் சின்னத்தின் வெளியீட்டு நிகழ்வை நடத்துவதற்கான சிறந்த மைல்கல்லாக மாறியது. இந்த நிகழ்ச்சியை, பாதுகாப்பு துறை அமைச்சர், மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடல்சார் மரபுகள் மற்றும் கடற்படை வழக்கப்படி, இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முக்கிய நகரங்கள், மலைத்தொடர்கள், ஆறுகள், துறைமுகங்கள் மற்றும் தீவுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இம்பால் நகரத்தின் பெயர் சூட்டப்பட்ட நவீன போர்க்கப்பல் குறித்து இந்தியக் கடற்படை மிகவும் பெருமை கொள்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் ஒரு நகரத்தின் பெயரிடப்பட்ட முதல் போர்க்கப்பல் இதுவாகும், இதற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஏப்ரல் 16, 2019 அன்று ஒப்புதல் அளித்தார்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (டபிள்யூ.டி.பி) வடிவமைக்கப்பட்டு எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தின் அடையாளமாகவும், உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தக் கப்பலில் எம்.ஆர்.எஸ்.ஏ.எம், பிரம்மோஸ் எஸ்.எஸ்.எம், உள்நாட்டு டார்பிடோ டியூப் லாஞ்சர்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட சுமார் 75% உயர் உள்நாட்டு தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இம்பால், மிகக் குறைந்த நேரத்தில் தனது கடல்சார் சோதனைகளை உருவாக்கி, நிறைவேற்றிய முதல் உள்நாட்டு அழிப்புக் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் வரும் டிசம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா