15 பி நான்கு திட்டத்தில் 3-வது திட்டமான ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் 12706 இம்பால் சேவையை 2023, நவம்பர் 28, அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பைரேன் சிங் முன்னிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். காங்லா அரண்மனை, ‘காங்லா-சா’ ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இம்பாலைத் தொடங்கிவைப்பது இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்காக தியாகம் செய்த மணிப்பூர் மக்களுக்குச் செய்யும் உரிய மரியாதையாகும். முகடு வடிவமைப்பு இடதுபுறத்தில் காங்லா அரண்மனையையும், வலதுபுறத்தில் ‘காங்லா-சா’-வையும் சித்தரிக்கிறது. காங்லா அரண்மனை மணிப்பூரின் ஒரு முக்கியமான வரலாற்று, தொல்லியல் தளமாகும். டிராகன் தலை மற்றும் சிங்கத்தின் உடலுடன், ‘காங்லா-சா’ மணிப்பூர் வரலாற்றில் ஒரு புராண உயிரினமாகும். மேலும் இது அதன் மக்களின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்படுகிறது. ‘காங்லா-சா’ மணிப்பூரின் மாநிலச் சின்னமாகும்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையின் மசாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் வடிவமைத்த இந்தக் கப்பல், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தின் அடையாளமாகும். மேலும், உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இந்தக் கப்பல் 2023, அக்டோபர் 20 அன்று எம்.டி.எல் நிறுவனத்தால் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.
7,400 டன் எடையும், 164 மீட்டர் நீளமும் கொண்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான இம்பால் , தரையில் இருந்து விண்ணில் பாயும் ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், டார்பிடோக்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த பல்துறை தளமாகும். ஒருங்கிணைந்த எரிவாயு மற்றும் எரிவாயு (கோகாக்) உந்துவிசை மூலம் இயக்கப்படும் இது 30 கடல் மைல் (56 கிமீ / மணி) வேகத்தை அடையும் திறன் கொண்டது.
இந்தக் கப்பல் சுமார் 75% அளவிற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. இதில் பின்வருவன அடங்கும்:
- தரையில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் ஏவுகணைகள் (பெல், பெங்களூர்)
- தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் (பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், புதுதில்லி)
- உள்நாட்டு டார்பிடோ டியூப் லாஞ்சர்கள் (லார்சன் & டூப்ரோ, மும்பை)
- நீர்மூழ்கி எதிர்ப்பு உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் (லார்சன் & டூப்ரோ, மும்பை)
- 76 மிமீ சூப்பர் ரேபிட் கன் மவுண்ட் (பெல், ஹரித்வார்)
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 2019-ம் ஆண்டு ஏப்ரல் 20–ம் தேதிகப்பல் கடலில் விடப்பட்டது. இந்தக் கப்பல் தனது முதல் கடல் சோதனைகளுக்காக 2023, ஏப்ரல் 28, அன்று புறப்பட்டது, மேலும் துறைமுகம் மற்றும் கடலில் விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது , இது ஆறு மாத கால வரையறைக்குள் 2023, அக்டோபர் 20 அன்று விநியோகிக்கப்பட்டது.
இந்தியக் கடற்படை மேம்பட்ட போர்க்கப்பலுக்கு வரலாற்று நகரமான இம்பால் பெயரை வைப்பதில் மிகவும் பெருமை கொள்கிறது . வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயரால் அழைக்கப்படும் முதல் தலைநகர் போர்க்கப்பல் இதுவாகும், இதற்கு குடியரசுத் தலைவரால் 2019, ஏப்ரல் 16 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திவாஹர்