சர்வதேச கடல்சார் அமைப்பில் அதிக வாக்குகளுடன் இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது – சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது நடைபெற்ற தேர்தலில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளுடன் சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. “சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகள்” என்ற குழுவில் 10 நாடுகளின் பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளும் இந்த கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறுகையில், “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கப்பல் துறையில் சிறந்த சாதனைகளைப் படைக்க தமது அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்றார். சர்வதேச கடல்சார் அமைப்பில் இந்தியாவுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். சர்வதேச கடல்சார் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்புகளை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த அதிக வாக்குகள் அங்கீகரிக்கின்றன என்று அவர் கூறினார்.

சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும். இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்தரன் தலைமையில், கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநர் திரு ஷியாம் ஜெகன்நாதன், மற்றும் இந்த துறை சார்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திலாஹர்

Leave a Reply