வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறதா? படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சிதைத்து விடக்கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக, தமிழக அரசின் அனைத்துத் திட்ட பயனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவிகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட இருப்பதாகவும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை கிடையாது என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மகளிர் உரிமைத் தொகையும், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகையும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுபவை; அவை இரண்டையும் இணைத்துப் பார்ப்பது சமூகத்தில் பெரும் குழப்பங்களையும், பயனாளிகளுக்கு பெரும் இன்னலையும் ஏற்படுத்தி விடக் கூடும். தமிழ்நாட்டில் ஏராளமான உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். ஓர் உதவித் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பத்தினருக்கு இன்னொரு திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படாது என்று அறிவித்தால் அது உதவித் திட்டங்களின் நோக்கத்தை சிதைத்து விடும். அது மிகவும் தவறு.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை எளிதாக வழங்கப்படுவதில்லை. படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு வேலை கிடைக்காத நிலையில் தான் உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கவே முடியும். அதன்பின் நடைமுறைகள் முடிந்து உதவித்தொகை கிடைக்க ஓராண்டு ஆகும். அதன்பிறகும் கூட மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தான் உதவித்தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் ரூ.10,800, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.21,600 மட்டுமே வழங்கப்படும். இந்தத் தொகை அவர்களின் வாழ்வாதாரம் ஆக முடியாது. வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக விண்ணப்பிப்பதற்கு மட்டுமே இந்தத் தொகை போதுமானதாக இருக்கும். அதையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி நிறுத்த முயல்வது நியாயமல்ல.

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்படவுள்ளதா? அல்லது தொடருமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை அந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும், எதிர்காலத்தை பிரகாசமாக்கிக் கொள்ளவும் உதவும் என்பதால், ஒருவேளை உதவித் தொகையை நிறுத்தும் திட்டம் அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குப் பிந்தைய 17ஆண்டுகளில் உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 70 லட்சம் பேர் பதிவு செய்திருக்கும் நிலையில், அவர்களில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக 55 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply