புதுதில்லியில் இன்று (டிசம்பர் 27, 2023) நடைபெற்ற கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், உலகத் தரம் வாய்ந்த செயல்திறன், ஒருமைப்பாட்டின் வலிமையில் கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனம் 13 ஆண்டுகளிலேயே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்றார். இங்கு 1000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதன் வாயிலாக இந்நிறுவனம் ஒரு சர்வதேச சுகாதார மையமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார்.
நவீன தகவல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பால், சுகாதாரத் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் நோய்த்தடுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார். நம் நாட்டில் கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் தீவிரமாக உள்ளன, மேலும் அவற்றால் ஏற்படும் ஏராளமான நோய்கள் கவலைக்குரியவை. கல்லீரல் நோய்களைத் தடுப்பதில் கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்திய குடியரசுத்தலைவர் நீண்டப் பணி நேரம், தொடர்ச்சியான அவசர சிகிச்சைகள், இரவுப் பணிகள் போன்ற சவால்களுக்கு மத்தியில், அவர்கள் தொடர்ந்து முழு விழிப்புணர்வுடனும், உற்சாகத்துடனும் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார். சவால்கள் இருந்தபோதும், மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாகவும் விழிப்புடனும் இருப்பது முக்கியம் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா