ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பயணம்; எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 டிசம்பர் 27 அன்று ஜம்மு-காஷ்மீரின் எல்லையில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியில் நிலவும் சூழ்நிலை, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே , வடக்கு கமாண்டின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோரும் சென்றனர்.

தற்போதைய பாதுகாப்பு நிலைமை, ஊடுருவல் தடுப்பு, செயல்பாட்டு தயார் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. செயல்பாட்டு சவால்களுடன் தொடர்புடைய அம்சங்கள் குறித்து திரு ராஜ்நாத் சிங் களத்தில் உள்ள தளபதிகளுடன் விவாதித்தார் . செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது தொழில்முறை நடத்தை, விடாமுயற்சியில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர் , போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய அவர், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

ராணுவ வீரர்களுடன் அரசு துணை நிற்கும் என்றும், வீரர்களின் ஈடு இணையற்ற வீரம், தியாகத்திற்கு நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும் என்றும் திரு ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். ஆயுதப் படைகளின் நலன் அரசின் முன்னுரிமை என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு உளவுத்துறை கட்டமைப்பை வலுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply