சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டது வேதனைக்குரியது.
இந்த தனியார் ஆலையின் சேமிப்பு கிடங்குக்கு திரவ அம்மோனியா கடலுக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் அப்பகுதி வாழ் மக்கள் சுவாசத்தால் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக இந்த வாயுக்கசிவினால் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம், வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் ஆலை நிர்வாகம் ஆலையினைப் பாதுகாப்பாக இயக்கிட கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டிருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மருத்துவ உதவியும் மற்றும் உதவித் தொகையும் வழங்க வேண்டும்.
வாயுக்கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இது போன்ற ஒரு பாதுகாப்பற்ற சூழல் இனிமேல் ஏற்படாமல் இருக்க தனியார் ஆலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசும், தனியார் ஆலையினால் ஏற்பட்ட வாயுக்கசிவுக்கு உரிய விசாரணை, நடவடிக்கை மேற்கொண்டு, ஆலையின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, அப்பகுதி வாழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா