மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று (30-12-2023) நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் (ஹமாரா சங்கல்ப் விக்சித் பாரத்) என்ற கருப்பொருளுடன் மத்திய அரசின் 2024-ம் ஆண்டுக்கான நாள்காட்டியை (காலண்டர்) வெளியிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மக்களின் முன்னேற்றத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதன் மூலமும், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலமும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்தை 2024 நாள்காட்டி சித்தரிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அரசின் எண்ணற்ற சாதனைகள், அது தொடர்பான படங்கள் நாட்குறிப்பின் பக்கங்களை அலங்கரிக்கின்றன என்றார்.
தற்சார்பு நாடாக மாறுவதில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மொபைல் போன் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இருந்த நாடு இன்று இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசிகளை இறக்குமதி செய்து வந்த நாடு தற்போது தடுப்பூசி நட்புத் திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது என்றும் அவர் கூறினார். இந்தியா இன்று உற்பத்தி நாடாக திகழ்கிறது எனவும் இப்போது பெரிய சக்தியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா இன்று மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும், ஒருபுறம் இலவச சமையல் எரிவாயுத் திட்டம் மறுபுறம் மகளிருக்கான ட்ரோன் திட்டம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு என்றும் திரு அனுராக் தாக்கூர் கூறினார்.
வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் அரசின் குறிக்கோள்களாகும் என்று கூறிய அவர், இந்த நெறிமுறைதான் ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியாவை இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விழுமியங்களின் உணர்வு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா