இந்தியாவை வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு தொழில்துறை அமைப்பில் வலுவான அடித்தளத்தை அரசு உருவாக்குகிறது!- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .

இந்தியாவை வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பில் வலுவான அடித்தளத்தை அரசு உருவாக்கி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று (டிசம்பர் 31, 2023) தேஜ்பூரில் நடைபெற்ற தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதற்கான இலக்கை எட்ட தமது அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.

ஆயுத இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஆயுத தளவாட உற்பத்திப் பொருட்கள் தொடர்பாக ஐந்து பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் கீழ் 509 பாதுகாப்பு உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவற்றின் உற்பத்தி இனி உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.  இது தவிர பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் 4 உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்களை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதில் 4,666 பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவை இனி நமது நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

முதல் முறையாக, பாதுகாப்புத் தளவாட உள்நாட்டு உற்பத்தி சாதனை அளவாக ரூ. 1 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2016-17 ஆம் ஆண்டில் ரூ. 1,521 கோடியாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி மதிப்பு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 15,920 கோடியை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

மகளிருக்கு அதிகாரமளித்தல் பற்றிக் குறிப்பிட்ட  திரு ராஜ்நாத் சிங், ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். இன்று நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுடன் பெண்கள் சரிசமமாக உள்ளனர் என்று அவர் கூறினார். போர் விமானங்கள் முதல் சந்திராயன் வரை, பெண்களின் பங்களிப்பு இல்லாத துறையே இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்குவதில் இளைஞர்களின் குறிப்பிடத்தக்க பங்கை சுட்டிக் காட்டிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவைப் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வல்லரசாக மாற்ற இளைஞர்களின் திறன்கள் முக்கியமானவை என்றார். இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், இந்த அரசு புத்தொழில் கலாச்சாரம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புச் சூழல் அமைப்பை ஊக்குவித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் துறையில் பாதுகாப்பு சிறப்புக் கண்டுபிடிப்பு (ஐடெக்ஸ்) இயக்கம் தொடங்கப்பட்டதன் மூலம் புதுமையான யோசனைகளை வெற்றிகரமாக அரசு ஊக்குவித்து வருகிறது என்றார். இளைஞர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால், இன்று நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply