கடற்படையின் துணைத் தளபதியாக அதி விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி 2024, ஜனவரி 4 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்றதும், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, தினேஷ் கே திரிபாதி மேற்கு கடற்படை முதன்மை கமாண்டிங் அதிகாரியாகப் பணியாற்றினார்.
சைனிக் பள்ளி ரேவா, தேசியப் பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா ஆகியவற்றின் முன்னாள் மாணவரான அவர் 1985, ஜூலை 01 அன்று இந்தியக் கடற்படையில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு, மின்னணுப் போர் நிபுணரான இவர் கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் சமிக்ஞை தகவல் தொடர்பு அதிகாரி மற்றும் மின்னணுப் போர் அதிகாரியாகவும், பின்னர் ஏவுகணை எதிர்ப்புக் கப்பலான ஐஎன்எஸ் மும்பையின் நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மைப் போர் அதிகாரியாகவும் பணியாற்றினார். இந்தியக் கடற்படை கப்பல்களான வினாஷ், கிர்ச், திரிசூல் ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கி வழி நடத்தினார். மும்பையில் உள்ள மேற்குக் கடற்படையின் செயல்பாட்டு அதிகாரி, கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர், புதுதில்லியில் கடற்படைத் திட்டங்களின் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அங்கு அவருக்குத் திம்மையா பதக்கம் வழங்கப்பட்டது. துணை அட்மிரல் திரிபாதி கடமை அர்ப்பணிப்புக்காக அதி விசிஷ்ட் சேவா, நவ்சேனா பதக்கங்கள் பெற்றுள்ளார்.
திவாஹர்