பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டம் தொடர்பான 63 வது திட்டக் குழு கூட்டம் ஜனவரி 4, 2023 அன்று புதுதில்லியில் உள்ள வாணிஜ்யா பவனில் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் சரக்குப் போக்குவரத்துப் பிரிவுச் சிறப்புச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பிரதிநிதிகளும் நித்தி ஆயோக் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்தத் கூட்டத்தின்போது, ரூ. 5,000 கோடிக்கும் அதிகமான மொத்த திட்ட மதிப்பீடு கொண்ட மூன்று திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் வழியாக செல்லும் புதிய ரயில் பாதை திட்டமும் அடங்கும். இந்தத் திட்டம் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நாட்டின் வடக்கு, மேற்கு பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்ல உதவும்.
மிர்சாபூர்-அயோத்தி வழித்தடத் திட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆந்திராவில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை உருவாக்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டங்கள் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து கணிசமான சமூக-பொருளாதார நன்மைகளை வழங்குவதோடு அந்தந்தப் பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
எம்.பிரபாகரன்