நவீன கல்வியை வழங்கும் நிலையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க நாட்டில் அதிக குருகுலங்களை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (ஜனவரி 06, 2024 ) உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள சுவாமி தர்ஷானந்த் குருகுல மகாவித்யாலயாவில் நடைபெற்ற புதிய குருகுல அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய திரு ராஜ்நாத் சிங், வெளிநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் தார்மீக மதிப்புகள் சீரழிந்து வருவதாகக் கூறினார். இந்த நேரத்தில், இளைஞர்களிடையே தார்மீக விழுமியங்களை உள்ளடக்கிய நவீன கல்வியை வழங்க குருகுலங்கள் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
சுமார் 1,000 முதல் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டில் பல பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தன என்றும், அவற்றில் குருகுல பாரம்பரியம் பரவலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு, வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் அந்த அமைப்பை கிட்டத்தட்ட அழித்ததாக அவர் தெரிவித்தார். நாட்டின் பண்பாட்டு உணர்வுக்கு ஏற்றதாக அல்லாமல் கல்வி வழங்கும் முறை மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதில் இந்திய கலாச்சாரம் தாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டது என்றும் அந்த உணர்வு நம்மை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதித்தது எனவும் அவர் கூறினார். அந்த நேரத்தில், சுவாமி தர்ஷானந்த் இந்த குருகுலத்தை நிறுவியதாகவும் இது நமது இளம் தலைமுறையினருக்கு ஒளியூட்டுகிறது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.
திவாஹர்