ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி 27 -ந்தேதியுடன் முடிவடைந்தது. அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்பட 46 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை 28.01.2015 காலை 11 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது.
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி மற்றும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் ஆகியோரது மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது எல்லா ஆவணங்களும் சரியாக, முழுமையாக இருந்தன. அவர்களது மனுக்கள் மீது யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள், தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் மீது பண மோசடி வழக்கு உள்ளதாகவும், வழக்கு விபரத்தை தனது வேட்பு மனுவில் சுப்பிரமணியம் குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு அ.தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியம் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மனுவுடன் அளிக்கப்பட்ட அறிக்கையில் தவறுகள் இருந்தாலும், தள்ளுபடி செய்யக் கூடாது என்ற விதிமுறைகளின்படி பா.ஜ.க வேட்பாளரின் மனுவை ஏற்பதாக தேர்தல் அலுவலர் மனோகரன் அறிவித்தார். தேவைப்பட்டால் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் போட்டியிட தடை இல்லை எனவும், அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.
இது தற்போது பெரும் சர்ச்சையையும், சட்டச் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதே தவறை ஒரு சுயேட்சை வேட்பாளர் செய்து இருந்தால், அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு இருப்பார்களா? உறுதிமொழி பத்திரம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு, திருச்சி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்பட 3 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நவீன கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க சென்னை பிரிசிஷன் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இக்கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி மேற்கண்ட நிறுவனம் மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தது. பயிற்சி முடித்தபின் ஒப்பந்தத்தின்படி சுப்பிரமணியன் அந்நிறுவனத்துக்கு பயிற்சி கட்டணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த நிறுவனத்தினர் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி சேர்மன் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் கண்ணன், சீத்தாராமன், கிறிஸ்துராஜ் ஆகியோர் மீது திருச்சி மாநகர் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். திருச்சி உறையூர் காவல்நிலையத்தில் இவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சுப்பிரமணியம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் 3 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களின் முன் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவித்து பிரிசிஷன் கம்ப்யூட்டர் நிறுவன பொதுமேலாளர் பாஸ்கர் என்பவரும் மனு செய்தார்.
இந்த மனு 28.01.2015 அன்று மாலை 4 மணிக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததது. விசாரணையை அடுத்து சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றமே செய்யாத சுப்பிரமணியம், ஏன் முன் ஜாமீன் பெறவேண்டும்?
இந்தநிலையில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சி.பாபு, பாரதீய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளதாக புகார் தெரிவித்து, திருச்சி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பழனிச்சாமியிடம் ஒரு மனு அளித்து உள்ளார்.
தனக்கு திருமணம் ஆனதையும், மனைவி இருப்பதையும் வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்து 12 ஆண்டுகளுக்கு மேல் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் செயல்படும் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் வேறு எப்படி இருப்பார்?
தலைவன் எவ்வழியோ! தொண்டனும் அவ்வழியே! தலைவன் எட்டடி பாய்ந்தால், தொண்டன் பதினாறடி பாய்வான்! என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in