அசாம் மாநிலம் குவகாத்தியில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்ஐபிஇஆர்) நிரந்தர வளாகத்தை மத்திய ரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார். நிப்பர் ஜதராபாத், நிப்பர் ரேபரேலி ஆகிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வடகிழக்கில் சுகாதார உள்கட்டமைப்பைக் கணிசமாக அதிகரிக்கும் வகையில், டாக்டர் மாண்டவியா இன்று மிசோரமின் ஐஸ்வாலில் உள்ள பிராந்திய துணை மருத்துவ மற்றும் செவிலியர் அறிவியல் நிறுவனத்தில் (ரிபான்ஸ்) ஐந்து புதிய பிரிவுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் பிரதமரின் – ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம், தேசிய சுகாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் 80-க்கும் அதிகமான சுகாதார உள்கட்டமைப்பு அலகுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

ரசாயனங்கள் மற்றும் உரங்கள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக இணையமைச்சர் திரு பகவந்த் கூபா; அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா; திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹா; அசாம் சுகாதாரத் துறை அமைச்சர் கேஷப் மஹந்தா; மிசோரம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திருமதி லால்ரின்புய், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மூன்று நிப்பர்களின் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாக்டர் மாண்டவியா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, அறிவு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வணிகத்தை இணைக்கும் பாலமாக மாறுவதன் மூலம் மருந்து மற்றும் மெட் டெக் (மருத்துவத் தொழில்நுட்ப) துறையில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் பாதையில் நிப்பர்கள் உள்ளன என்றார். நாடு முழுவதும் தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வித் துறையில் நிப்பர் ஒரு பெரிய பெயராக மாறியுள்ளது. சுமார் 8,000 மாணவர்கள் பட்டம் பெற்று தொழில்முறை பணியில் வெற்றி பெற்றுள்ளனர். நிப்பர் பெயரில் 380-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் விரிவான முன்முயற்சியின் கீழ், வடகிழக்கு பிராந்தியத்தில் 2 அலகுகளை அர்ப்பணிப்பதற்கும், 49 அலகுகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், 32 சுகாதார உள்கட்டமைப்பைத் தொடங்குவதற்கும் மொத்தம் 404.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், அசாம் மருத்துவக் கல்லூரியில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவை நாட்டுக்கு அர்ப்பணிக்க 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். டாடா மெமோரியல் இன்ஸ்டிடியூட் மற்றும் பிற 14 புற்றுநோய் நிறுவனங்களின் உதவியுடன் புற்றுநோய் சிகிச்சை மையங்களின் கட்டமைப்பைத் தயாரித்ததற்காக அசாமைப் பாராட்டிய அவர், இதன் காரணமாக முழு வடகிழக்கும் பெரும் நன்மைகளைப் பெறவுள்ளது என்றார்.

பின்னணி:

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, விருந்தினர் மாளிகை, பணியாளர்கள் மற்றும் செவிலியர் குடியிருப்புகள், பொது விடுதி வளாகம் ஆகியவை ரிபான்ஸின் ஐந்து புதிய வசதிகளில் அடங்கும். 7 வடகிழக்கு மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டப்பட்டதில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (10 அலகுகள்), ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் (37 அலகுகள்), வட்டார பொது சுகாதார அலகுகள் (1 யூனிட்) மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (1) ஆகியவை அடங்கும். பி.எம்.எஸ்.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ் அசாம் மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்துவதில் 265 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவு  மற்றும் 64 ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் 12 டயாலிசிஸ் படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply