மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார் .

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தர் மற்றும் ராஜமாதா ஜிஜாவ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ‘வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047 – இளைஞர்களுக்காக, இளைஞர்களால்’ என்ற கருப்பொருளில் மாநில அணியின் அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார், இதில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மல்லாகம்ப், யோகாசனம் மற்றும் தேசிய இளைஞர் விழா பாடல் உள்ளிட்டவை நடைபெற்றன.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்று இந்தியாவின் இளைஞர் சக்திக்கான தருணத்தைக் குறிக்கிறது என்றும், அடிமைக் காலத்தில் நாட்டை புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் ஊக்குவித்த சுவாமி விவேகானந்தரின் மகத்தான ஆளுமைக்கு அது அர்ப்பணிக்கப்படுவதாகவும் கூறினார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று கொண்டாடப்படும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு அனைத்து இளைஞர்களுக்கும் திரு. மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவின் பெண் சக்தியின் அடையாளமான ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்த நாளையும் அவர் குறிப்பிட்டார், மேலும் மகாராஷ்டிராவில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா பூமி பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது என்பது தற்செயலானது அல்ல என்றும், இது நல்ல மற்றும் தைரியமான மண்ணின் விளைவு என்றும் பிரதமர் மோடி கூறினார். ராஜ்மாதா ஜிஜாபாய் போன்ற மாபெரும் ஆளுமைகள் மூலம் சத்ரபதி சிவாஜியை உருவாக்கிய இந்தப் பூமி, தேவி அகில்யாபாய் ஹோல்கர் மற்றும் ரமாபாய் அம்பேத்கர் போன்ற சிறந்த பெண் தலைவர்களையும், லோக்மான்ய திலகர், வீர் சாவர்க்கர், அனந்த் கன்ஹேரே, தாதாசாகேப் போட்னிஸ் மற்றும் சபேகர் பந்து போன்ற மகான்களையும் உருவாக்கியது என்று பிரதமர் கூறினார். “பகவான் ஸ்ரீ ராமர் நாசிக்கின் பஞ்சவடியில் அதிக நேரம் செலவிட்டார்”, என்ற பிரதமர் மகான்களின் பூமிக்கு தலைவணங்கினார். இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களை தூய்மைப்படுத்தவும், தூய்மை இயக்கத்தை மேற்கொள்ளவும் தாம் விடுத்த அறைகூவலை நினைவுகூர்ந்த பிரதமர், நாசிக்கில் உள்ள ஸ்ரீ கலாராம் கோயிலில் தாம் தரிசனம் மற்றும் பூஜை செய்வதைக் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனித யாத்திரை மையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இளைஞர் சக்தியை முதன்மையானதாகக் கொண்டிருக்கும் பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இளைஞர் சக்தியைக் கொண்ட இந்தியா, உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் நுழைவதற்கு ஸ்ரீ அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தருக்கு கடமைப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா முதல் 3 ஸ்டார்ட்அப் சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான காப்புரிமை பெறும் நாடுகளில் ஒன்றாகவும், நாட்டின் இளைஞர் சக்தியின் வெளிப்பாடாக ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘அமிர்த காலத்தின்’ தற்போதைய தருணம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான தருணம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். எம்.விஸ்வேஸ்வரய்யா, மேஜர் தயான் சந்த், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், படுகேஷ்வர் தத், மகாத்மா புலே, சாவித்ரி பாய் புலே போன்ற ஆளுமைகளின் சகாப்தத்தை வரையறுக்கும் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், ‘தற்போதைய அமிர்த காலத்தில்’ இளைஞர்கள் அவர்களைப் போன்ற பொறுப்புடமைகளை கொண்டிருக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். நாட்டை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல பாடுபடுமாறும் கேட்டுக்கொண்டார். “இந்திய வரலாற்றில் மிகவும் அதிர்ஷ்டசாலி தலைமுறையாக இளைஞர்களாகிய உங்களைக் கருதுகிறேன். இந்திய இளைஞர்களால் இந்த இலக்கை அடைய முடியும் என்று எனக்குத் தெரியும்” என்று அவர் கூறினார். மை-பாரத் இணையதளத்துடன் இளைஞர்கள் இணைக்கப்படும் வேகம் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். 75 நாட்களுக்குள், 1.10 கோடி இளைஞர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், அனைத்து தடைகளும் தகர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், வளர்ந்து வரும் துறைகள், ஸ்டார்ட்அப்கள், திறன்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் நவீன மற்றும் ஆற்றல்மிக்க சூழல் அமைப்பை உருவாக்குவதைக் குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல், நவீன திறன் மேம்பாட்டுச் சூழலை உருவாக்குதல், கலைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறைக்கான பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துதல், பிரதமர் கவுஷல் விகாஸ் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் புதிய ஐஐடி மற்றும் என்ஐடிகளை நிறுவுதல் குறித்தும் அவர் பேசினார். “உலகம் இந்தியாவை ஒரு புதிய திறமையான சக்தியாகப் பார்க்கிறது” என்று குறிப்பிட்ட திரு. மோடி, தங்கள் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து பேசினார். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளுடன் அரசு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கின்றன என்று அவர் கூறினார்.

“இன்று, இளைஞர்களுக்கு வாய்ப்புகளின் புதிய அடிவானம் திறக்கப்படுகிறது, அதற்காக அரசு முழு சக்தியுடன் செயல்படுகிறது” என்று பிரதமர் மோடி அறிவித்தார். ட்ரோன், அனிமேஷன், அணு, விண்வெளி மற்றும் மேப்பிங் போன்ற துறைகளில் இவை உருவாக்கப்படும் சூழல் பற்றி அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசின் அதிவேக முன்னேற்றத்தை வலியுறுத்திய பிரதமர், நெடுஞ்சாலைகள், நவீன ரயில்கள், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்கள், தடுப்பூசி சான்றிதழ்கள் போன்ற டிஜிட்டல் சேவைகள் மற்றும் மலிவு தரவு ஆகியவற்றின் வளர்ச்சி நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வழிகளைத் திறக்கிறது என்றார்.

“இன்று, நாட்டின் மனநிலையும், நடைமுறையும் இளமையாக உள்ளன” என்று கூறிய பிரதமர், இன்றைய இளைஞர்கள் பின்தங்காமல் வழிநடத்துகிறார்கள். எனவே, வெற்றிகரமான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 திட்டங்களின் எடுத்துக்காட்டுகளை வழங்கியதன் மூலம் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முன்னணி நாடாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த், சுதந்திர தினத்தின் போது துப்பாக்கி வணக்கத்திற்கு பயன்படுத்தப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி மற்றும் தேஜஸ் போர் விமானங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். மற்ற அம்சங்களுடன், சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை யுபிஐ அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பரவலான பயன்பாட்டை திரு மோடி குறிப்பிட்டார். “அமிர்த காலத்தின் வருகை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது” என்று கூறிய திரு மோடி, இந்தியாவை ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ ஆக்க இந்த அமிர்த காலத்தின் மூலம் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு இளைஞர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

இளம் தலைமுறையினரின் கனவுகளுக்கு புதிய சிறகுகள் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் கூறினார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 3 வது பெரிய பொருளாதாரமாக மாறுவது, உற்பத்தி மையமாக மாறுவது, காலநிலை மாற்றத்தைத் தடுப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற பொறுப்புகளின் புதிய இலக்குகளை பட்டியலிட்ட பிரதமர், இப்போதுள்ள சவால்களை சமாளிப்பது மட்டுமின்றி, நமக்கான புதிய சவால்களை நாம் கட்டமைக்க வேண்டும்” என்றார்.

இளம் தலைமுறையினர் மீதான தனது நம்பிக்கையின் அடிப்படையை விளக்கிய பிரதமர் மோடி, “இந்தக் காலகட்டத்தில், அடிமைத்தனத்தின் அழுத்தம் மற்றும் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்ட நாட்டில் ஒரு இளம் தலைமுறை தயாராகி வருகிறது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்று இந்தத் தலைமுறை இளைஞர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் என்றார். யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் மதிப்பை உலகம் அங்கீகரித்து வருவதாகவும், இந்திய இளைஞர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்.

இளைஞர்கள் தங்கள் காலத்தில் கம்பு ரொட்டி, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் நுகர்வு குறித்து தங்கள் தாத்தா பாட்டி மூலம் அறிய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், அடிமை மனப்பான்மைதான் இந்த உணவு வகைகளை வறுமையுடன் தொடர்புபடுத்தியது, இந்திய சமையலறைகளில் இருந்து வெளியேற வழிவகுத்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். சிறுதானியங்களுக்கு அரசு ஒரு புதிய அடையாளத்தை வழங்கியுள்ளது, இதன் மூலம் இந்தியக் குடும்பங்களில் ஸ்ரீ அன்னாவாக மீண்டும் இவை வலம் வருகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். “இப்போது நீங்கள் இந்தத் தானியங்களின் பிராண்ட் அம்பாசிடராக மாற வேண்டும். உணவு தானியங்கள் மூலம் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும், நாட்டின் சிறு விவசாயிகளும் பயனடைவார்கள்” என்று திரு மோடி மேலும் கூறினார்.

இளைஞர்கள் அரசியல் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். உலகத் தலைவர்கள் இப்போதெல்லாம் இந்தியாவில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். “இந்த நம்பிக்கைக்கு, இந்த விருப்பத்திற்கு ஒரு காரணம் உள்ளது – இந்தியா ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்களின் பங்கேற்பு வாரிசு அரசியலை நீர்த்துப்போகச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். வாக்களிப்பதன் மூலம் தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். “முதல்முறை வாக்காளர்கள் நமது ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் கொண்டு வர முடியும்” என்று அவர் கூறினார்.

“அமிர்த காலத்தில் வரவிருக்கும் 25 ஆண்டுகள் உங்களுக்கு கடமைக்காலம்” என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். “நீங்கள் உங்கள் கடமைகளை முதன்மையாகக் கடைப்பிடிக்கும்போது, சமூகம் முன்னேறும், நாடும் முன்னேறும்” என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். செங்கோட்டையில் இருந்து தாம் விடுத்த வேண்டுகோளை நினைவுகூர்ந்த பிரதமர், உள்ளூர் தயாரிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், இந்தியத் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தவும், எந்த வகையான போதைப்பொருள் மற்றும் அடிமைத்தனத்திலிருந்தும் விலகி இருக்கவும், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பெயரில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் குரல் எழுப்பவும், இதுபோன்ற தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இளைஞர்களை வலியுறுத்தினார்.

இந்திய இளைஞர்கள் ஒவ்வொரு பொறுப்பையும் முழு பக்தியுடனும் திறமையுடனும் நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, வலுவான, திறமையான இந்தியாவின் கனவை நனவாக்க நாங்கள் ஏற்றிய விளக்கு அழியாத ஒளியாக மாறும், இந்த அழியாத யுகத்தில் உலகை ஒளிரச் செய்யும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் திரு அஜித் பவார், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமானிக் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களை ஒரு முக்கிய அங்கமாக மாற்றுவது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்த முயற்சியின் மற்றொரு பகுதியாக, நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை (என்ஒய்எஃப்) பிரதமர் தொடங்கி வைத்தார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 முதல் 16 வரை ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவை நடத்தும் மாநிலம் மகாராஷ்டிரா. வளர்ச்சியடைந்த இந்தியா Bharat@ 2047: இளைஞர்களுக்காக இளைஞர்களால் என்பது இந்த ஆண்டு விழாவின் கருப்பொருள் ஆகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வில் ஐக்கிய தேசத்திற்கான அடித்தளங்களை வலுப்படுத்தவும் ஒரு அமைப்பை உருவாக்க தேசிய இளைஞர் விழா முயற்சிக்கிறது. நாசிக்கில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில், நாடு முழுவதிலுமிருந்து சுமார் 7500 இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற விளையாட்டுகள், சொற்பொழிவு மற்றும் கருப்பொருள் அடிப்படையிலான விளக்கக்காட்சி, இளம் கலைஞர் முகாம், சுவரொட்டி தயாரித்தல், கதை எழுதுதல், இளைஞர் மாநாடு, உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply