ஸ்ரீ ராம் ஆலயக் கட்டுமானத்திற்கு இஸ்ரோ உட்பட குறைந்தது நான்கு முன்னணி தேசிய நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவியுள்ளன!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .

ஸ்ரீ ராம்  ஆலயக் கட்டுமானத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள டி.எஸ்.டி (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை) மற்றும்  ஐஐடி, இஸ்ரோ உட்பட குறைந்தது நான்கு முன்னணி தேசிய நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவியுள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ; பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன் , பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட பிரதான கோயில் கட்டிடம், ராஜஸ்தானின் பன்சி பஹத்பூரில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மணற்கற்களால் ஆனது என்று அவர் கூறினார். அதன் கட்டுமானத்தில் சிமெண்ட்,  இரும்பு மற்றும் எஃகு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. 3 மாடி கோயிலின் கட்டமைப்பு பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ரிக்டர் அளவுகோலில் 8 வரையிலான வலுவான அதிர்வுகளை 2,500 ஆண்டுகள் வரை தாங்கும் என்று அவர் கூறினார்.

“சி.எஸ்.ஐ.ஆர்-சி.பி.ஆர்.ஐ ரூர்க்கி ஆரம்ப கட்டத்திலிருந்தே ராமர் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதான கோயிலின் வடிவமைப்பு, சூரிய திலக பொறிமுறையை வடிவமைத்தல், கோயில் அடித்தளத்தின் வடிவமைப்பு, பிரதான கோயிலின் கட்டமைப்பு, சுகாதாரக் கண்காணிப்பு ஆகியவற்றிற்கு இந்நிறுவனம் பங்களித்துள்ளது, “என்று அமைச்சர் கூறினார்.

சிபிஆர்ஐ தவிர, சிஎஸ்ஐஆர்-என்ஜிஆர்ஐ ஹைதராபாத் அடித்தள வடிவமைப்பு மற்றும் நில அதிர்வு / பூகம்ப பாதுகாப்பு குறித்து குறிப்பிடத்தக்க உள்ளீடுகளை வழங்கியதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். சில ஐ.ஐ.டி.க்கள், நிபுணர் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தன, மேலும் இஸ்ரோவின் விண்வெளி தொழில்நுட்பங்கள் கூட பிரம்மாண்டமான கட்டமைப்பை நிர்மாணிப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

ராமர் கோயிலின் ஒரு தனித்துவமான அம்சம்,  சூரிய திலகப் பொறிமுறை ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமி நாளில் நண்பகல் 12 மணிக்கு சூரியக் கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் சுமார் 6 நிமிடங்கள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து நாட்காட்டியின் முதல் மாதத்தின் ஒன்பதாவது நாளில் பொதுவாக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படும் ராம நவமி,விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் பிறந்த நாளைக் குறிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் சூரியனின் பாதை குறித்த தொழில்நுட்ப ஆதரவை வழங்கியது.  பெங்களூரில் உள்ள ஆப்டிகா நிறுவனம், லென்ஸ்கள் மற்றும் பித்தளை குழாய்கள் தயாரிப்பில் ஈடுபட்டது என்றும் கியர் பாக்ஸ் மற்றும் பிரதிபலிப்புக் கண்ணாடிகள் / லென்ஸ்கள் மூலம் ஷிகாராவுக்கு அருகிலுள்ள மூன்றாவது மாடியில் இருந்து சூரியக் கதிர்கள் கர்ப்ப கிரகத்திற்குக் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறினார்.

குடமுழுக்கு விழாவில் சி.எஸ்.ஐ.ஆரும் ஈடுபடும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் பக்தியின் உணர்வைக் கொண்டாடும் வகையில், சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எச்.பி.டி பாலம்பூர் (இபி) ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் தெய்வீக ராமர் பிரதிஷ்டை விழாவிற்கு துலிப் மலர்களை அனுப்புகிறது.

“இந்தப் பருவத்தில்  துலிப் மலர்கள் பூப்பதில்லை. இது ஜம்மு  காஷ்மீர் மற்றும் வேறு சில உயர் இமயமலைப் பகுதிகளில் அதுவும் வசந்த காலத்தில் மட்டுமே வளர்கிறது.  பாலம்பூர் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம்  சமீபத்தில் ஓர் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் துலிப் அதன் பருவத்திற்காகக் காத்திருக்காமல், ஆண்டு முழுவதும் துலிப் மலர்கள் கிடைக்கும்,”என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் பரவியுள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் புதிய இந்தியாவின் நவீன கால நினைவுச் சின்னங்களைப் பிரதிபலிக்கின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்முவில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருந்துகள் நிறுவனம் (ஐ.எம்) அரோமா மிஷன் மற்றும் ஊதா புரட்சியை வழிநடத்துகிறது.

இதேபோல், லக்னோவில் உள்ள தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) ‘என்.பி.ஆர்.ஐ நமோ 108’ என்ற புதிய தாமரை வகையை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நமோ 108 தாமரை வகை பூக்கள் மார்ச் முதல் டிசம்பர் வரை பூக்கும். இது முதல் தாமரை வகையாகும், அதன் மரபணு அதன் குணாதிசயங்களுக்காக முழுமையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply