பிரதமரின் தேசிய பால புரஸ்கார் -2024, விருதுகளை 19 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ” பிரதமரின் தேசிய பால புரஸ்கார்” விருதை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 19 குழந்தைகளுக்கு நேற்று வழங்கினார். 2024, ஜனவரி 22 அன்று     புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற சிறப்பு விழாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் மற்றும் பிரமுகர்கள், மூத்த அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த இளம் சிறார்கள் கலந்து கொண்டனர்.

வீரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரிவுகளில் தலா ஒருவருக்கும், சமூக சேவை பிரிவில் 4 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 5 பேருக்கும், கலை மற்றும் கலாச்சாரம் பிரிவில் 7 பேருக்கும் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு குழந்தையும் நாட்டின் வளமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய உடையில் விருதைப் பெற்றது தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றும் வகையில், இதயத்தை வருடும் காட்சியாக இருந்தது.

விருது பெற்றவர்களைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், இந்தக் குழந்தைகள் பன்முகத் திறமை கொண்டவர்கள் என்றும், கடின உழைப்பின் மூலம் தங்களது அடையாளத்தை வடிவமைக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது என்றும் கூறினார். குழந்தைகளுக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும், இதனால் அவர்கள் தங்கள் திறன்களையும், உற்சாகத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply