பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ராணி லட்சுமி பாயின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலாச்சார நிகழ்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்ததுடன், இது இந்தியாவின் வரலாற்றை உயிர்ப்புடன் கொண்டு வந்துள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அவர்கள் இப்போது குடியரசு தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சி, 75வது குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் இந்தியாவின் மகளிர் சக்திக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள பெண் பங்கேற்பாளர்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, அவர்கள் இங்கு தனியாக வரவில்லை என்றும், தங்களது மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் சமூகங்களின் தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறினார். இன்றைய மற்றொரு சிறப்பான தருணத்தை குறிப்பிட்ட பிரதமர், தேசிய பெண் குழந்தைகள் தினம் அவர்களின் தைரியம், உறுதிப்பாடு மற்றும் சாதனைகளை கொண்டாடும் நாள் என்று குறிப்பிட்டார். இந்திய மகள்கள் சமுதாயத்தை நன்மைக்காக சீர்திருத்தும் திறனைக் கொண்டுள்ளனர் என்று கூறிய பிரதமர், பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் சமூகத்தின் அடித்தளத்தை அமைப்பதில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார், இந்த நம்பிக்கையை இன்றைய கலாச்சார நிகழ்ச்சிகளில் காண முடிந்தது என்று அவர் கூறினார்.
ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இது அரசின் அதிர்ஷ்டம் என்றும், இன்றைய இளைய தலைமுறையினர் அந்த மாமனிதரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் எனறும் கூறினார். வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையிலும், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும், எப்போதும் அவர் பணிவைக் கடைப்பிடித்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். அவரது வாழ்க்கை முழுவதும் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். ஏழைகள் மீது கவனம் செலுத்துதல், கடைசி பயனாளியையும் சென்றடைய வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் போன்ற அரசின் முன்முயற்சிகள் கர்பூர் தாக்கூரின் நடவடிக்கைகளைப் பிரதிபலிப்பதாக பிரதமர் கூறினார்.
எம்.பிரபாகரன்