பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை, டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை உருவாக்குவதற்கான நெறிமுறைகளில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும், டொமினிகன் குடியரசுக்கும், இடையிலான இருதரப்பு உறவுகள் நட்பு ரீதியானவை மற்றும் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. தற்போது, இந்தியாவுக்கும், டொமினிகன் குடியரசுக்கும், இடையே வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு நிறுவன நடைமுறை எதுவும் இல்லை. இந்தியா முதன்மையாக டொமினிகன் குடியரசிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்கிறது மற்றும் அந்த நாட்டுக்கு மருந்துகள், கடல் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது.
கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை அமைப்பதன் மூலம், இந்தியாவுக்கும், டொமினிகன் குடியரசுக்கும் இடையேயான பொருளாதார உறவு வலுப்பெறும்.
கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழு நிறுவப்படுவது பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியில் உள்ள சவால்களைத் தணிக்க உதவும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், வாகனங்கள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுக்கும், இது தற்சார்பு இந்தியாவுக்கு அதிக அந்நிய செலாவணி வருவாய்க்கு வழிவகுக்கும்.
திவாஹர்