தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024 க்கான முன்னேற்பாடுகளை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார்.
தேர்வு குறித்த கலந்துரையாடல் என்பது வருடாந்திர நிகழ்வாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட திரு. பிரதான், தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பதற்றத்திலிருந்து மீண்டு தங்களால் இயன்ற பங்களிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்றார்.
இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நிகழ்வான தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடனான கலந்துரையாடல் குறித்து ஒவ்வொருவரிடமும் நிலவும் உற்சாகத்தை அவர் வெளிப்படுத்தினார்.
“தேர்வு குறித்த கலந்துரையாடல்” என்பது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒரு தனித்துவமான முயற்சியாகும், இது தேர்வுகளுடன் தொடர்புடைய மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதற்கும், வாழ்க்கையை நோக்கி ஒரு கொண்டாட்டமான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கும், ‘தேர்வு வீரர்கள் ‘ என்ற பெரிய இயக்கத்துடன் இணைந்துள்ளது.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வு குறித்த கலந்துரையாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, நான்காவது பதிப்பு ஆன்லைனில் நடைபெற்றது, அதே நேரத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது பதிப்புகள் டவுன்-ஹால் வடிவத்திற்குத் திரும்பியது. கடந்த ஆண்டு 31.24 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1.95 லட்சம் பெற்றோர்கள் உற்சாகமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்