உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள உச்சநீதிமன்ற கலையரங்கில்  உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டிஜி எஸ்சிஆர்), டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் புதிய வலைத்தளம் உள்ளிட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு,  உச்சநீதிமன்றம் இன்று அதன் 75-வது ஆண்டைத் தொடங்கும் போது வருகை தந்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு அதன் 75-வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததையும் குறிப்பிட்டார்.

சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர இந்தியா என்ற கனவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கண்டதாகவும், இந்தக் கோட்பாடுகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் பிரதமர் கூறினார். “கருத்து சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் அல்லது சமூக நீதி என எதுவாக இருந்தாலும், உச்சநீதிமன்றம் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது” என்று பிரதமர் கூறினார். தனிநபர் உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்த மைல்கல் தீர்ப்புகள் நாட்டின் சமூக-அரசியல் சூழலுக்கு ஒரு புதிய திசையை அளித்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளின் அளவுருக்களை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, இன்றைய பொருளாதாரக் கொள்கைகள் நாளைய துடிப்பான இந்தியாவுக்கு அடிப்படையாக அமையும் என்றார். இன்று வகுக்கப்படும் சட்டங்கள் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.

உலகளாவிய புவிசார் அரசியலில் மாறிவரும் நிலப்பரப்புக்கு இடையே, உலகின் கண்கள் இந்தியாவின் மீது இருப்பதாகவும், அதன் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். நமக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், வாழ்க்கையை எளிதாக்குதல், எளிதாக வர்த்தகம் செய்தல், பயணம், தகவல் தொடர்பு மற்றும் நீதியை எளிதாக்குதல் ஆகியவை நாட்டின் முன்னுரிமைகள் என்று குறிப்பிட்டார். “நீதியை எளிதாக்குவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை மற்றும் அதன் ஊடகமான இந்திய உச்ச நீதிமன்றத்தின் உரிமை” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply