தேர்வு குறித்த உரையாடல் 2024-ன் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேர்வு குறித்த 7-வது உரையாடல் (பிபிசி) நிகழ்வில் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். பிபிசி (தேர்வு குறித்த உரையாடல்) என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் மேற்கொள்ளப்படும் ஓர் இயக்கமாகும். இது ஒவ்வொரு குழந்தையின் தனித்துவமான தன்மையைக் கொண்டாடுகிறது, ஊக்குவிக்கிறது, தன்னை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

திரண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உரையாற்றிய பிரதமர், மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற லட்சியங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பல்வேறு வடிவங்களில் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார். புதிய தலைமுறையினர் பல்வேறு பிரச்சனைகள் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அந்தப் பிரச்சினைகளுக்கு அவர்கள் என்ன தீர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்தக் கண்காட்சி பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

தனது கலந்துரையாடலைத் தொடங்கிய பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் பாரத மண்டபத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கியதுடன், ஜி20 உச்சிமாநாடு பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தார். இந்த மண்டபத்தில் உலகின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கூடி உலகின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர் என்று குறிப்பிட்டார்.

வெளிப்புற அழுத்தம் மற்றும் மன அழுத்தம்

ஓமனில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த டானியா ஷாபு, தில்லி புராரியில் உள்ள அரசு சர்வோதயா பால வித்யாலயாவைச் சேர்ந்த முகமது அர்ஷ் ஆகியோர் கலாச்சார, சமூக எதிர்பார்ப்புகள் போன்ற வெளிப்புறக் காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான பிரச்சினையைப் பிரதமரிடம் எழுப்பினர். வழக்கம் போலவே இந்த ஏழாவது ஆண்டு கலந்துரையாடலிலும் கலாச்சார மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் தொடர்பான கேள்விகள் வந்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். மாணவர்கள் மீது வெளிப்புற காரணிகளின் கூடுதல் அழுத்தம் காரணமாக ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய அவர், பெற்றோர்கள் இதை அவ்வப்போது அனுபவித்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். அழுத்தத்தைக் கையாளும் திறனை தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ளவும், வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதற்குத் தயாராகவும் மாணவர்களுக்குப் பிரதமர் பரிந்துரைத்தார். மழை, வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள மனம் ஏற்கனவே தயாராகி வரும் நிலையில், ஒரு தீவிர தட்பவெப்ப நிலையிலிருந்து மற்றொரு தீவிர தட்பவெப்ப நிலைக்குப் பயணிக்கும் உதாரணத்தைக் கூறி மாணவர்கள் தங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். மன அழுத்த நிலைகளை மதிப்பிடவும், படிப்படியாக அதிலிருந்து விலகி முன்னேறவும் அவர் பரிந்துரைத்தார். இதனால் மாணவர்களின் திறன் பாதிக்கப்படாது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வெளிப்புற மன அழுத்தம் குறித்த பிரச்சினையைக் கூட்டாக இணைந்து கையாள வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். மாணவர்களின் குடும்பங்கள், ஒவ்வொருவரும் வேலை செய்யும் வெவ்வேறு வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சகமாணவர்களின் அழுத்தம் மற்றும் நண்பர்களிடையே போட்டி

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அரசு செயல்விளக்கப் பல்நோக்குப் பள்ளியைச் சேர்ந்த பாக்யலட்சுமி, குஜராத்தின் ஜெஎன்வி பஞ்சமஹாலைச் சேர்ந்த த்ரஷ்டி செளகான், கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சுவாதி திலீப் ஆகியோர் எழுப்பிய, சகமாணவர்களுக்கிடையேயான அழுத்தம் மற்றும் போட்டி குறித்து பதிலளித்த பிரதமர், போட்டியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இருப்பினும், போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரும்பாலும் ஆரோக்கியமற்ற போட்டிக்கான ஆரம்ப விதைகள் குடும்பச் சூழ்நிலைகளால் விதைக்கப்படுகின்றன. இது ஒரே குடும்பத்தில் பிறந்த உடன்பிறப்புகளிடையே ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழிவகுக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குழந்தைகளுக்கிடையே ஒப்பீடுசெய்வதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் போட்டியிடும் அதே வேளையில், ஒருவருக்கொருவர் உதவுவதற்கு முன்னுரிமை அளிக்கும் காணொளியைப் பிரதமர் உதாரணமாக சுட்டிக்காட்டினார். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவது யாருக்கும் பயன் அளிக்காத விளையாட்டு அல்ல என்றும், ஒரு நண்பரின் நல்ல செயல்திறன் களத்தை சிறப்பாக செயல்படுவதை கட்டுப்படுத்தாது என்பதால் போட்டி தனக்குள்ளேயே உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தப் போக்கு, ஊக்கமளிக்கும் நண்பர்களாக இல்லாதவர்களுடன் நட்பு கொள்ளும் போக்கை ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் கூறினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தங்கள் குழந்தைகளின் சாதனையை முகவரி அட்டையாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் நண்பர்களின் வெற்றியில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். நட்பு என்பது கொடுக்கல் வாங்கல் உணர்வு அல்ல” என்று பிரதமர் கூறினார்.

மாணவர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர்களின் பங்கு

மாணவர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து விளக்கிய பிரதமர், ஆந்திரப் பிரதேசம் உப்பரப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியர் திரு கொண்டகாஞ்சி சம்பதா ராவ், அசாம் மாநிலம் சிவசாகரைச் சேர்ந்த ஆசிரியர் பண்டி மேடி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு வகுப்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பள்ளியையும் சேர்ந்த மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் திறன் இசைக்கு உண்டு என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மாணவர்-ஆசிரியர் இடையேயான தொடர்பை வகுப்பின் முதல் நாளிலிருந்து தேர்வு நேரம் வரை படிப்படியாக விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திரு மோடி, இது தேர்வுகளின் போது மன அழுத்தத்தை முற்றிலும் அகற்றும் என்று கூறினார். கற்பிக்கப்படும் பாடங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் பழகுவதை விட அவர்களுடன் எளிதில் அணுகக்கூடியவர்களாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தங்கள் நோயாளிகளுடன் தனிப்பட்ட தொடர்பு வைத்திருக்கும் மருத்துவர்களை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், அத்தகைய பிணைப்பு நோயாளியின் நோயை பாதியாகக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றார். குடும்பங்களுடன் தனிப்பட்ட தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் முன்பு மேற்கொண்ட சாதனைகளுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்றும் பிரதமர் பரிந்துரைத்தார். “ஆசிரியர்கள் பணி என்பது ஒரு வேலை அல்ல, மாணவர்களின் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தும் பொறுப்பை அவர்கள் சுமக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

தேர்வு மன அழுத்தத்தைக் கையாள்வது

மேற்குத் திரிபுராவில் உள்ள பிரணவந்தா வித்யா மந்திரைச் சேர்ந்த ஆதிதா சக்ரவர்த்தி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவரும், ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவருமான ராஜ்யலட்சுமி ஆச்சார்யா ஆகியோர் தேர்வு மன அழுத்தத்தைக் கையாள்வது குறித்துப் பிரதமரிடம் கேள்வி எழுப்பினர். பெற்றோர்களின் அதீத உற்சாகம் அல்லது மாணவர்களின் அதீத அக்கறை காரணமாக ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். தேர்வு எழுதும் தினத்தைப் புதிய ஆடைகள், சடங்குகள் அல்லது எழுதுபொருட்கள் மூலம் மிகைப்படுத்த வேண்டாம் என்று அவர் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் கடைசி நிமிடம் வரை தயாராக வேண்டாம் என்றும், நிதானமான மனநிலையுடன் தேர்வுகளை அணுக வேண்டும் என்றும், தேவையற்ற பதற்றத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு வெளிப்புற கவனச்சிதறலையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடைசி நேரத்தில் பீதியைத் தவிர்க்க வினாத்தாளை படித்து, பதிலளிப்பதற்கான நேர ஒதுக்கீட்டுடன் திட்டமிடுமாறு பிரதமர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பெரும்பாலான தேர்வுகள் இன்னும் கைகளால் எழுதப்படுகின்றன என்று கூறிய பிரதமர், கணினி மற்றும் தொலைபேசிகள் மூலம் எழுதும் பழக்கம் குறைந்து வருவதை மாணவர்களுக்கு நினைவூட்டினார். எழுதும் பழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் படிக்கும் நேரத்தில் 50 சதவீதத்தை எழுதுவதற்கு ஒதுக்குமாறு அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் எதையாவது எழுதும்போதுதான் அது உண்மையிலேயே அவர்களுக்குப் புரிகிறது என்று அவர் கூறினார். மற்ற மாணவர்களின் வேகத்தைக் கண்டு பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்

தேர்வுக்குத் தயாராவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது குறித்துக் கேள்வி எழுப்பிய ராஜஸ்தானைச் சேர்ந்த சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் தீரஜ் சுபாஷ், லடாக்கின் கார்கிலில் உள்ள பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா மாணவர் நஜ்மா காட்டூன், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் டோபி லாமேவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் அபிஷேக் குமார் திவாரி ஆகியோர், உடற்பயிற்சியுடன் படிப்பை நிர்வகிப்பது குறித்துப் பிரதமரிடம் கேட்டனர். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையில் மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். சீரான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும், எல்லாவற்றையும் தவிர்க்கவும் அவர் கேட்டுக்கொண்டார். “ஆரோக்கியமான மனதிற்கு ஆரோக்கியமான உடல் நிலை முக்கியமானது” என்று பிரதமர் மோடி கூறினார். ஆரோக்கியமாக இருப்பதற்கு சில நடைமுறைகள் தேவை என்று கூறிய அவர், சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது, வழக்கமான மற்றும் முழுமையான தூக்கத்தைப் பெறுவது பற்றி தெரிவித்தார். மொபைல் போன்ற வெண்திரைக் கருவிகள் உபயோகிக்கும் பழக்கவழக்கங்கள் தூக்கத்தை இழக்கச் செய்கின்றன. இது நவீன சுகாதார அறிவியலில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில், படுக்கைக்குச் சென்ற 30 நொடிகளுக்குள் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருவதாகப் பிரதமர் கூறினார். “விழித்திருக்கும்போது முழுமையாக விழித்திருப்பதும், தூங்கும்போது ஆழ்ந்த உறக்கம் அடையக்கூடியதும் ஒரு சமநிலையாகும்” என்று அவர் கூறினார். ஊட்டச்சத்து குறித்துப் பேசிய பிரதமர் மோடி, சரிவிகித உணவை உண்ண வலியுறுத்தினார். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வாழ்க்கையின் முன்னேற்ற அம்சங்கள்

மேற்கு வங்கம், வடக்கு 24 பர்கானா, பாரக்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மதுமிதா மாலிக், ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள மில்லினியம் பள்ளியைச் சேர்ந்த அதிதி தன்வார் ஆகியோர் எழுப்பிய வாழ்க்கை முன்னேற்ற அம்சங்கள் குறித்த நுண்ணறிவுகளை வழங்கிய பிரதமர், வாழ்க்கையின் அம்சங்கள் என்று வரும்போது தெளிவு பெற வேண்டும் என்றும், குழப்பம், முடிவெடுக்க முடியாத நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். தூய்மை உறுதிப்பாட்டின் உதாரணத்தைக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டில் முன்னுரிமைப் பகுதியாக ‘தூய்மை’ மாறி வருகிறது என்று குறிப்பிட்டார். கலை, கலாச்சாரத் துறையில் இந்தியாவின் சந்தை கடந்த 10 ஆண்டுகளில் 250 மடங்கு வளர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். “நமக்குத் திறமை இருந்தால், எதையும் உயிர்ப்பிக்க முடியும்” என்று கூறிய பிரதமர் திரு மோடி, மாணவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எந்தப் பணியையும் முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை பற்றிப் பேசிய பிரதமர், ஒரே பாடப்பிரிவைக் கற்றுக் கொள்ளாமல் பல்வேறு பாடப்பிரிவுகளையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியில் மாணவர்களின் பங்கேற்பு, திறன், அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய அவர், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் ஒப்பிடும்போது அரசின் திட்டங்களைத் தெரிவிக்க அவர்கள் செய்த பணிகள் மிகவும் சிறப்பாக உள்ளன என்றார். “குழப்பத்தைக் களைவதற்கு நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். ஓர் உணவகத்தில் வேண்டியதைக் கேட்கும் முன், என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை உதாரணமாகக் குறிப்பிட்டார். மேற்கொள்ளப்பட வேண்டிய முடிவுகளின் நேர்மறை, எதிர்மறை அம்சங்களை மதிப்பீடு செய்யவும் அவர் பரிந்துரைத்தார்.

பெற்றோரின் பங்கு

தில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபஸ்ரீ, பெற்றோர்களின் பங்கு குறித்தும், மாணவர்கள் எவ்வாறு நம்பிக்கையை உருவாக்க முடியும் என்றும் பிரதமரிடம் வினவினார். குடும்பங்களில் நிலவும் நம்பிக்கைக் குறைபாடு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த முக்கியமான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் உடனே ஏற்படுவது அல்ல என்றும், நீண்டகால செயல்முறையின் விளைவாகும் என்றும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரின் நடத்தை குறித்தும் ஆழமான சுய பகுப்பாய்வு தேவை என்றும் அவர் கூறினார். நேர்மையான தகவல் தொடர்பு, நம்பிக்கைக் குறைவுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்று அவர் கூறினார். மாணவர்கள் தங்கள் நடவடிக்கைகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். அதேபோல், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் சந்தேகப்படுவதற்கு பதிலாக தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நம்பிக்கைக் குறைவோடு வளர்க்கப்படும் குழந்தைகள் மனச்சோர்வுடன் இருக்கும் என்று அவர் கூறினார். மாணவர்களுடனான தகவல் தொடர்பு வழிமுறைகளை ஏற்படுத்துமாறும், பாரபட்சம் காட்டுவதைத் தவிர்க்குமாறும் ஆசிரியர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் நண்பர்களின் குடும்பங்களைத் தவறாமல் சந்தித்து குழந்தைகளுக்கு உதவும் நேர்மறையான விஷயங்கள் பற்றி விவாதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தொழில்நுட்ப ஊடுருவல்

பெற்றோர் தரப்பில் மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த சந்திரேஷ் ஜெயின் மாணவர்களின் வாழ்க்கையில் தொழில்நுட்ப ஊடுருவல் குறித்த பிரச்சினையை எழுப்பினார். இதேபோல் ஜார்க்கண்டின் ராம்கரைச் சேர்ந்த குமாரி பூஜா ஸ்ரீவஸ்தவா, ஏராளமான சமூக ஊடகத் தளங்களுக்கு இடையே படிப்புகளில் கவனம் செலுத்துவது குறித்துக் கேட்டார். இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரின் கங்கூவில் உள்ள டி.ஆர் டி.ஏ.வி பள்ளியின் மாணவர் அபினவ் ராணா, தேர்வு மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்க மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது மற்றும் ஊக்குவிப்பது, அதே நேரத்தில் மொபைல் தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கற்றலுக்கான கருவியாகப் பயன்படுத்துவது குறித்த பிரச்சினையை எழுப்பினார். “எதையும் அளவுக்கு அதிகமாக நுகர்வது மோசமானது” என்று கூறிய பிரதமர், வீட்டில் சமைத்த உணவுடன் அதிகப்படியான மொபைல் போன் பயன்பாட்டை ஒப்பிட்டு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினார். பயன் தரும் அடிப்பைடையில் தொழில்நுட்பம், மொபைல் போன்களை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “அனைத்துப் பெற்றோரும் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்” என்றும், தனியுரிமை, ரகசியம் என்ற அம்சத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். குடும்பத்தில் விதிகள், ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இரவு உணவின் போது மின்னணு சாதனப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும், வீட்டில் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டுப் பகுதிகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார். “இன்றைய உலகில், தொழில்நுட்பத்தை எவரும் தவிர்க்க முடியாது” என்றும் பிரதமர் கூறினார். இதை ஒரு சுமையாக கருதக்கூடாது, ஆனால் அதன் பயன்பாட்டைக் கற்றுக்கொள்வது அவசியமாகும் என்று அவர் கூறினார். தொழில்நுட்பம் ஒரு கல்வி வளம் என்பதை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு மொபைல் போனின் கடவுச் சொற்களையும் சக குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். “இது பல தீமைகளைத் தடுக்கும்” என்று அவர் மேலும் கூறினார். பிரத்யேக மொபைல் பயன்பாடுகள் கருவிகளைப் பயன்படுத்தி திரை நேரத்தைக் கண்காணிப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். வகுப்பறையில் மொபைல் போன்களின் வளம் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

பிரதமர் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்கிறார், நேர்மறையாக இருக்கிறார்?

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் எம்.வகேஷ், பிரதமர் பதவியில் உள்ள நீங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்டார். உத்தராகண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள டைனாஸ்டி மாடர்ன் குருகுல அகாடமியின் மாணவி சினேகா தியாகி, பிரதமரிடம், “உங்களைப் போல நாங்கள் எப்படி நேர்மறையாக இருக்க முடியும்?” என்று கேட்டார். பிரதமர் பதவியில் உள்ள மனஅழுத்தங்களைக் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள் என்பதை அறிவது நல்லது என்று பிரதமர் கூறினார். ஒவ்வொருவரும் எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர் என்று அவர் கூறினார். மன அழுத்தத்தைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவர் எதிர்வினையாற்ற முடியும் என்பதையும், மன அழுத்தம் உள்ளவர்களால் வாழ்க்கையில் அதிகம் சாதிக்க முடியாது என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். “தனது அணுகுமுறை குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், ‘நான் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்கிறேன். கடந்து போகும் வரை நான் செயலற்றுக் காத்திருக்கவில்லை. இது எனக்கு எல்லா நேரத்திலும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது. புதிய சூழ்நிலைகளைக் கையாள்வது என்னை வளப்படுத்துகிறது. நாட்டின் 140 கோடி மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதே எனது மிகப்பெரிய நம்பிக்கை’” என்று அவர் தெரிவித்தார். பல நூறு லட்சம் சவால்கள் உள்ளன என்றால், கோடிக்கணக்கான தீர்வுகள் உள்ளன என்றார். நான் ஒருபோதும் என்னைத் தனியாகக் காணவில்லை, அனைவரும் என்னோடு உள்ளனர். எனது நாடு, நாட்டு மக்களின் திறன்களை நான் எப்போதும் அறிவேன். இதுதான் என் சிந்தனையின் அடிப்படைக் கரு” என்று பிரதமர் கூறினார். “எனது நாட்டு மக்களின் திறன்களை நான் எந்த அளவுக்கு மேம்படுத்துகிறேனோ, அந்த அளவுக்கு சவால்களை எதிர்கொள்ளும் திறன் மேம்படும்” என்று அவர் கூறினார். வறுமைப் பிரச்சனை குறித்து உதாரணம் கூறிய பிரதமர், ஏழைகளே வறுமையை ஒழிக்க முடிவு செய்தால் அது களையப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார். “அவர்களுக்கு உறுதியான வீடு, கழிப்பறை, கல்வி, ஆயுஷ்மான், குடிநீர் குழாய் போன்றவற்றை வழங்குவது தனது பொறுப்பு என்றும் அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டவுடன், வறுமையை ஒழிப்பது உறுதி” என்றும் பிரதமர் கூறினார். அவரது 10 ஆண்டு ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்தார்…

மேலும், முன்னுரிமை அம்சங்கள் குறித்த ஞானம் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இது அனுபவம், எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் உருவாகும் என்றும் தனது தவறுகளைப் படிப்பினையாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

கொவிட் தொற்றுநோயை உதாரணமாகக் கூறிய அவர், எந்தப் பணியும் இல்லாமல் இருப்பதற்கு பதிலாக, மக்களை அணிதிரட்டவும், கூட்டு வலிமையை உயர்த்தவும் விளக்கேற்றுதல், ‘தட்டுதல்’ போன்ற செயல்களைத் தேர்வு செய்ததாகக் கூறினார். அதேபோல், விளையாட்டு வெற்றியைக் கொண்டாடுதல், சரியான உத்தி, வழிகாட்டுதல், தலைமைத்துவம் ஆகியவை மூலம் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் குவிந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

முறையான நிர்வாகத்திற்கு, கீழிருந்து மேல் வரை துல்லியமான தகவல்களைக் கொண்ட ஓர் அமைப்பும், மேலிருந்து கீழ் வரை சரியான வழிகாட்டுதலுக்கு ஓர் அமைப்பும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வாழ்க்கையில் ஏமாற்றமடையவில்லை என்று கூறிய பிரதமர், இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டால், நேர்மறையான எண்ணம் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார். “எனது வாழ்க்கையில் ஏமாற்றத்தின் அனைத்துக் கதவுகளையும், ஜன்னல்களையும் நான் மூடிவிட்டேன்” என்று பிரதமர் கூறினார். எதையாவது செய்ய வேண்டும் என்ற மனவுறுதி வலுவாக இருக்கும்போது, முடிவெடுப்பது எளிதாகிறது என்று அவர் கூறினார். “சுயநல நோக்கம் இல்லாதபோது, முடிவெடுப்பதில் ஒருபோதும் குழப்பம் இருக்காது” என்று அவர் கூறினார். தற்போதைய தலைமுறையினரின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இன்றைய தலைமுறையினர் தங்கள் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது என்று கூறினார். “தற்போதைய தலைமுறை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையினரும் பிரகாசிக்கவும், தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் ஒரு நாட்டை உருவாக்க அரசு பாடுபடுகிறது” என்று கூறிய பிரதமர், இது ஒட்டுமொத்த தேசத்தின் கூட்டுத் தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நேர்மறையான சிந்தனையின் சக்தி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளில் கூட நேர்மறையான விளைவுகளைக் காண்பதற்கு நேர்மறையான சிந்தனையின் வலிமையை அது அளிக்கிறது என்று கூறினார். அனைத்து மாணவர்களையும் ஊக்குவித்துத் தனது கலந்துரையாடலை நிறைவு செய்த பிரதமர், அவர்களின் வாழ்க்கை லட்சியங்களை அடைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply