மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் 200-வது பிறந்த தின விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார் .

குஜராத் மாநிலம் தங்காராவில் 2024, பிப்ரவரி 12 அன்று  மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த தின விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், மகரிஷி தயானந்த சரஸ்வதி போன்ற சிறந்த ஆளுமைகள் பிறந்ததால் நமது நாடு சிறந்து விளங்குகிறது என்றார். அவரது சமூக சீர்திருத்த லட்சியத்தை எடுத்துக்கொண்டு உண்மையை நிரூபிக்க ‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற புத்தகத்தை எழுதினார். லோகமான்ய திலகர், லாலா ஹன்ஸ்ராஜ், சுவாமி சிரத்தானந்த், லாலா லஜபதி ராய் போன்ற சிறந்த ஆளுமைகளிடம் அவரது கொள்கைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மகரிஷி தயானந்த சரஸ்வதியும், அவரது அசாதாரண சீடர்களும் மக்களிடையே புதிய விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.

19-ம் நூற்றாண்டில் இந்திய சமுதாயத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள் மற்றும் தீயப் பழக்கங்களை அகற்ற மகரிஷி தயானந்த சரஸ்வதி முன்முயற்சி மேற்கொண்டார் என்று குடியரசுத்தலைவர் கூறினார். நவீனத்துவம் மற்றும் சமூக நீதிக்கான பாதையை அவர் சமூகத்திற்குக்  காட்டினார். குழந்தைத் திருமணத்தையும், பலதார மணத்தையும் கடுமையாக எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஊக்குவித்தார். பெண் கல்வியையும், பெண்களின் சுயமரியாதையையும் வலுவாக ஆதரித்தவர். அவர் பரப்பிய ஒளி அறியாமையின் இருளை அகற்றியது. அந்த ஒளி அன்றிலிருந்து நம்மை வழிநடத்தி வருகிறது, எதிர்காலத்திலும் தொடர்ந்து அவ்வாறு செய்யும்.

பெண்களுக்கான பள்ளிகளையும், பெண் குழந்தைகளுக்கான உயர்கல்வி நிறுவனங்களையும் நிறுவியதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு ஆரிய சமாஜம் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சுவாமியின் 200-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இரண்டு ஆண்டுகளில், குடும்பம் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆரிய சமாஜம் ஏற்பாடு செய்துள்ளது பற்றி அவர் குறிப்பிட்டார்.  போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுதலும் இயற்கை விவசாயம் மேற்கொள்வதும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவும் என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு, ஆரிய சமாஜம் நிறுவப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆரிய சமாஜத்துடன் தொடர்புடைய அனைத்து மக்களும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான அவரின் பார்வையை செயல்படுத்தும் திசையில் தொடர்ந்து முன்னேறுவார்கள் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply