குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
அமித் ஷா தனது உரையில், இன்று அகமதாபாத் நகரில் ரூ .1950 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார். 2001 ஆம் ஆண்டு முதல் பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து மக்கள் சார்ந்த ஒட்டுமொத்த வளர்ச்சி என்ற கருத்தை நாடு முழுவதும் நிலைநாட்ட பணியாற்றி வருவதாக அவர் கூறினார். பிரதமர் மோடி தொடங்கிய வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குஜராத்தில் ஏழைகளுக்கு 1.25 லட்சம் வீடுகளை மோடி வழங்கியுள்ளார் என்றும், இப்போது ஏழைகள் தங்கள் வீடுகளில் வசிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் திரு ஷா மேலும் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் மாதிரியின் வடிவத்தில் வளர்ச்சிக்கான புதிய பார்வைக்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதன் அடிப்படையில் மக்கள் நாட்டினை மோடியிடம் ஒப்படைத்தனர். அவரது தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் முழு நாட்டிலும் ஒவ்வொரு துறையிலும் விரிவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் காரணமாக 2047 ஆம் ஆண்டில், உலகின் ஒவ்வொரு துறையிலும் இந்தியா முதல் இடத்தில் இருக்கும் என்று நாட்டின் 140 கோடி மக்கள் நம்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக நிலுவையில் இருந்த இதுபோன்ற பல பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி செய்துள்ளார் என்று திரு ஷா மேலும் கூறினார். கடந்த மாதம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் ராம் லாலா சிலையை திரு நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்தார். ஏறக்குறைய 550 ஆண்டுகளாக நாட்டின் ஒவ்வொருவரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக காத்திருந்தனர், மோடி அதைச் செய்தார்.
மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில், முதல் 5 ஆண்டுகள் முந்தைய அரசுகளின் குறைபாடுகளை தீர்ப்பதில் செலவிடப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகள் அடித்தளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். மூன்றாவது முறையாக பிரதமராக உள்ள மோடி, அந்த அடித்தளத்தில் மிக வேகமாக ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை உருவாக்கவுள்ளார்.
இன்று மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். குஜராத்தில் பிறந்த மகரிஷி தயானந்தர் நமது வேதங்களை மீட்டெடுத்தார் என்று அவர் கூறினார்.
காந்திநகர் மற்றும் அகமதாபாத் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளிலும் சுமார் 891 கோடி ரூபாய் செலவில் 44 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இது தவிர, ரூ .1,058 கோடி மதிப்புள்ள 26 திட்டங்களுக்கு பூமி பூஜையும் செய்யப்பட்டுள்ளது. ரூ. 1950 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகள் இன்று இங்கு தொடங்கப்பட்டுள்ளன என்றும் இதில் ரூ .1,000 கோடி மதிப்பிலான பணிகள் காந்திநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். குடிநீர், ரயில்வே திட்டங்கள், குளங்கள் புனரமைப்பு, கழிவுநீர் கழிவு நீரேற்று நிலையம், பொது மண்டபம், அங்கன்வாடி போன்ற பல பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். திரு நரேந்திர மோடி மற்றும் திரு பூபேந்திர படேல் ஆகிய இரட்டையர்கள் குஜராத்தில் வளர்ச்சியின் வேகத்தை செயல்படுத்தி வருவதாக திரு ஷா கூறினார்.
எம்.பிரபாகரன்