திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆங்கில மொழித் துறை சார்பில் ஆங்கில மொழியில் தகவல் தொடர்புத் திறன் குறித்த சர்வதேசப் பயிலரங்கு இன்று நடைபெற்றது.
இதில் போலந்தின் சிடெல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் எவெலினா சுவெட்சுக் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
போலந்தின் சிடெல்ஸ் பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பயிலரங்கு நடைபெற்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போலந்தின் சிடெல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து (ஆங்கிலத் துறை, கணினி அறிவியல் துறை) இரண்டு நிபுணத்துவ ஆசிரியர்கள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக விரிவுரையாற்றினர்.
பயிலரங்கில் தொடக்க உரையாற்றிய தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன், சிடெல்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பிரெஞ்சு, கொரியன், ஜப்பான், ஜெர்மன், ரஷ்யன் என ஐந்து வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்ற ஏழு ஆசிரிய உறுப்பினர்களைக் கொண்ட வெளிநாட்டு மொழிகள் துறையைத் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் விரைவில் நிறுவும் என்று பேராசிரியர் கிருஷ்ணன் அறிவித்தார்.
பதிவாளர் பேராசிரியர் ஆர்.திருமுருகன் பேசுகையில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட அருகிலுள்ள கிராமங்களில் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மொழிகள் துறையினர் மேற்கொண்டுவரும் பல்வேறு செயல்பாடுகளைப் பாராட்டினார்.
எஸ்.சதிஸ் சர்மா