அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது .

அரசு மின் சந்தை (GeM) கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது 2023-24 நிதியாண்டிற்கான அதன் இலக்கை விஞ்சியுள்ளது. 2024 பிப்ரவரி 14 நிலவரப்படி, அரசு மின் சந்தை மூலம் கொள்முதல் ரூ. 63,890 கோடியாக உயர்ந்துள்ளது, இது ஆண்டு இலக்கான ரூ. 21,325 கோடியில் 300 சதவீதம் ஆகும்.

இந்த அசாதாரண சாதனையின் மூலம், அரசு மின் சந்தை கொள்முதலில், அனைத்து மத்திய அமைச்சகங்களிலும் நிலக்கரி அமைச்சகம் முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது. இது தவிர, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் (சிபிஎஸ்இ) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அரசு மின் சந்தை கொள்முதலில் இந்த முன்னேற்றம், அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் வலுவான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. அரசு மின்சந்தைக் கொள்முதல் வெற்றியை முன்னெடுத்துச் செல்வதில் அந்த நிறுவனங்களின் ஈடுபாடு சிறப்பாக உள்ளது.

இந்த வரலாற்று மைல்கல்லை எட்டுவதில் அயராத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக நிலக்கரி அமைச்சகம் அந்த நிறுவனங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த சாதனை, அரசு மின் சந்தை கொள்முதலுக்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான எதிர்கால முயற்சிகளுக்கும் ஒரு முன்னோடியாக அமைகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply