ஒலிபரப்பு மற்றும் ஊடக தொழில்நுட்பம் குறித்த 28-வது சர்வதேச மாநாடு, கண்காட்சியை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர், தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் இந்தியாவின் ஒலிபரப்புத் தொழில்துறையின் உறுதியான பாதுகாவலராக இருந்து வருகிறது என்றும், மாற்றத்திற்கேற்ப தொலைநோக்குடன் வழிநடத்துகிறது என்றும் கூறினார். பொதுச் சேவை ஒலிபரப்பை ஊக்குவித்தல், ஊடக கல்வியறிவு முன்முயற்சிகள், ஒலிபரப்பு மற்றும் ஊடகத் துறையில் தனியார் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார்.
நமது நாட்டின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தரமான உள்ளடக்கத்தை வழங்க பொதுச் சேவை ஒலிபரப்புத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த அமைச்சர், நமது நாட்டின் வரலாற்றை வடிவமைப்பதில் பிரசார் பாரதி முக்கிய பங்காற்றியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். “தூர்தர்ஷனின் கருப்பு மற்றும் வெள்ளை திரைகள் முதல் அதன் எச்டி மற்றும் தற்போது 4 கே டிஜிட்டல் மாற்றம் வரை, அனலாக் மத்திய அலை முதல் டிஆர்எம் மற்றும் இப்போது ஆகாஷ்வாணியின் எஃப்எம் வரை, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் மாறுபட்ட நிகழ்ச்சிகள் குறித்து அவர் விளக்கினார்.
சமீபத்திய தலைமுறை ஒலிபரப்பு உபகரணங்களை உருவாக்குவது ஒரு கட்டாயமாகிவிட்டது என்று கூறிய அவர், உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பது, நமது அறிவியல் திறமைகளை வளர்ப்பது, தொழில்துறை, கல்வியாளர்களுக்கு இடையிலான கூட்டாண்மைகளை வளர்ப்பது ஆகியவற்றின் அவசியம் உள்ளது என்று தெரிவித்தார்.
புதிய டைரக்ட் டு மொபைல் (டி2எம்) தொழில்நுட்பங்கள் தொலைக்காட்சிக்கு மட்டுமின்றி, கையடக்க சாதனங்களான மொபைல் போன்கள், டேப்லெட்கள் போன்றவற்றிலும் அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும் இணையத்தின் தேவையின்றியும் ஒலிபரப்புவதற்கான அற்புதமான உள்ளடக்க சாத்தியங்களை வழங்குகின்றன என்று அமைச்சர் மேலும் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா