பிரதமரின் ஸ்வநிதி திட்டம் குறித்து விரிவாக விளக்கிய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவின் சாலையோர வியாபாரிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பெருந்தொற்று காலத்தின்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்றார். “சாலையோர வியாபாரிகளின் சுயதொழில், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.
இன்று புதுதில்லியில் நடைபெற்ற பிரதமர் ஸ்வநிதி மெகா முகாமில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன.
தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, நிதித்துறை இணையமைச்சர் திரு பகவத் கிஷன்ராவ் காரத், வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, தில்லி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் சாதனைகள் குறித்து கவனத்தை ஈர்த்த அமைச்சர், இந்தத் திட்டம் 60.94 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,678 கோடி மதிப்பில் 80.42 லட்சத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது என்றும், முதல் தவணையில் ரூ.10,000 வரையிலும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.50,000 வரையிலும் பிணையம் இல்லாத மூலதனக் கடன் வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் சாலையோர வியாபாரிகளின் நிதி உள்ளடக்கத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார். “இப்போது, சாலையோர வியாபாரிகள் முறைசாரா கடன்களை நம்பியிருக்க வேண்டியதில்லை என்றும், அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். கடன் வாங்குவதற்கு அவர்களுக்கு மாற்று வழியை அரசு வழங்கியுள்ளது” என்று திரு பூரி தெரிவித்தார்.
தில்லி சாலையோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் நன்மை குறித்து பேசிய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்தத் திட்டம் தில்லியில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு சாலையோர வியாபாரிகள் சமூகத்திலிருந்து மிகவும் தேவையான ஆதரவை வழங்கியுள்ளது என்றார்.
2024, பிப்ரவரி 14 நிலவரப்படி, தில்லியின் சாலையோர வியாபாரிகளிடமிருந்து 3.05 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 2.2 லட்சம் விண்ணப்பங்கள் வங்கிகளால் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.221 கோடி மதிப்புள்ள 1.9 லட்சம் கடன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இன்றைய முகாமில் 10,000 கடன்கள் வழங்கப்பட்டால், தில்லியில் 2 லட்சம் கடன் வழங்கல் என்ற மைல்கல்லை கடக்க முடியும்.
எஸ்.சதிஸ் சர்மா